இலக்கியம்

காதலர் தினம்... 1 கோடி ரோஜாக்கள் தந்த ஓசூர்!!

ஓசூர்: காதலர் தினத்துக்காக ஒரு கோடி ரோஜாக்களை உலகக் காதலர்களுக்கு ஏற்றுமதி செய்துள்ளது ஓசூர்.

நாளை பிப்ரவரி 14. காதலர் தினம். உலகமே கொண்டாடும் உற்சாகத் திருவிழாவாக மாறிவிட்ட இந்த தினத்தின் முக்கிய அடையாளமே ரோஜாக்கள்தான்.

காதலர்கள் அன்பைப் பறிமாறிக் கொள்ள ரோஜாக்களைத்தான் தூதாக அல்லது குறியீடாக அனுப்புகிறார்கள்.

எனவே ஏராளமான ரோஜாக்கள் இந்த நாளில் தேவைப்படுகின்றன. இதற்காக ஒசூரிலிருந்து ஒரு கோடி ரோஜா மலர்கள் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.

ஆசியாவிலேயே மிகப் பெரிய ரோஜா கொய்மலர் ஏற்றுமதி மண்டலம் ஒசூர் வட்டம் அமுதகொண்டபள்ளி கிராமத்தில் அமைந்துள்ளது. இங்கு 250 ஏக்கர் நிலப்பரப்பில் தமிழக அரசு நிறுவனமான டிட்கோ, நசீம் அகமது அசோசியேட்ஸ் என்ற நிறுவனத்துடன் இணைந்து டான்ஃபுளாரா ரோஜா மலர் ஏற்றுமதி மண்டலம் அமைத்துள்ளது.

டான்ஃபுளாரா மூலம் அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா, ஜெர்மனி, இத்தாலி மற்றும் அரபு நாடுகளுக்கு விமானம் மூலம் ரோஜா ஏற்றுமதி செய்யப்படுகிறது.

சாதாரண நாட்களில் ஒரு ரோஜா பூவின் விலை ரூ. 2. அதுவே காதலர் தினத்தில் ஒரு பூவின் விலை ரூ. 20 வரை விற்பனை செய்யப்படுகிறது. 10 பூக்கள் கொண்ட ஒரு கொத்து ரூ. 200 வரை விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 3 நாள்களில் மட்டும் இங்கிருந்து ஒரு கோடி ரோஜா மலர்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது