விளையாட்டு

அப்ரிதி கூறியது தவறு: ஹர்பஜன்

இந்தியர்கள் குறுகிய மனசுக்காரர்கள் என்று பாகிஸ்தான் ஒரு நாள் போட்டிக்கான கப்டன் ஷாஹித் அப்ரிதி கூறியது தவறு.
அப்படி இருந்திருந்தால் இந்தியாவுக்கு அவரும், அவரது அணியினரும் வந்திருந்த போது மக்கள் அன்பு காட்டியிருக்க மாட்டார்கள் என்று சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் கூறியுள்ளார்.
அப்ரிதியின் பேச்சு குறித்து ஹர்பஜன் சிங் கருத்து தெரிவிக்கையில், இதற்கெல்லாம் கருத்து தெரிவிக்காமல் இருப்பதே நல்லது. கருத்து தெரிவிக்கக் கூடிய அளவில் அப்ரிதி பேசவில்லை. இந்தியர்கள் குறுகிய மனசுக்காரர்களாக இருந்திருந்தால், இந்த அளவுக்கு இந்தியா வளர்ச்சி அடைந்திருக்காது. மேலும், இந்தியாவுக்கு அப்ரிதியும், அவரது அணியினரும் வந்திருந்தபோது விளையாடிய போது இந்தியர்கள் இந்த அளவுக்கு அன்பு காட்டியிருக்க மாட்டார்கள் என்றார் ஹர்பஜன்.
பாகிஸ்தான் தொலைகாட்சிக்கு அளித்த ஒரு பேட்டியில், இந்தியர்கள் குறுகிய மனதுடையவர்கள். இந்திய ஊடகங்கள் நெகட்டிவாகவே பாகிஸ்தான் குறித்து எழுதி வருகின்றன, பேசி வருகின்றன என்று குற்றம் சாட்டியிருந்தார். ஆனால் நேற்று தான் அப்படிப் பேசவில்லை என்று மறுத்திருந்தார். இதற்குத்தான் இன்று ஹர்பஜன் பதிலளித்துள்ளார்.

ஐ.சி.சி. ஒருநாள் போட்டியின் தரப்படுத்தல் முடிவுகள் வெளியீடு
 
ஐசிசி ஒருநாள் போட்டி தரவரிசையில் இந்தியா 121 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும் இலங்கை மூன்றாம் இடத்திலும்  உள்ளது.
அவுஸ்திரேலியா காலிறுதியிலேயே உலகக் கோப்பையில் இருந்து வெளியேறிய போதும் 128 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.
இறுதி ஆட்டத்தில் தோற்ற இலங்கை அணி 118 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும், தென் ஆப்பிரிக்கா 116 புள்ளிகளுடன் 4-வது இடத்திலும், இங்கிலாந்து 105 புள்ளிகளுடன் 5-வது இடத்திலும் உள்ளன.
பாகிஸ்தான், நியூசிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள், வங்கதேசம் அணிகள் முறையே 6, 7, 8, 9-வது இடங்களில் உள்ளன.
துடுப்பாட்ட தரவரிசையில்...
தென் ஆப்பிரிக்காவின் ஆம்லா, டிவில்லியர்ஸ், இலங்கையின் தில்ஷான், சங்ககரா, இங்கிலாந்தின் ஜொனாதன் டிராட் ஆகியோர் முதல் 5 இடங்களில் உள்ளனர்.
இந்திய வீரர் கோலி 6-வது இடத்திலும், கேப்டன் மகேந்திர சிங் தோனி 8-வது இடத்திலும், சச்சின் 9-வது இடத்திலும், கம்பீர் 10-வது இடத்திலும், யுவராஜ் 17-வது இடத்திலும் உள்ளனர்.
பந்து வீச்சு தரப்படுத்தலில்...
நியூசிலாந்து கேப்டன் வெட்டோரி முதலிடத்திலும், ஜிம்பாப்வே வீரர் பிரைஸ் இரண்டாவது இடத்திலும், இங்கிலாந்தின் ஸ்வான் 3-வது இடத்திலும், தென் ஆப்பிரிக்காவின் டேல் ஸ்டெயின் 4-வது இடத்திலும் உள்ளனர். இந்திய வீரர் ஹர்பஜன் சிங் 18-வது இடத்தில் உள்ளார்.
சகலதுறை ஆட்டக்காரர் தரவரிசையில்...
வங்கதேச கேப்டன் ஷகிப் அல் ஹசன் முதலிடத்திலும், ஆஸ்திரேலியாவின் ஷேன் வாட்சன் இரண்டாவது இடத்திலும், பாகிஸ்தான் கேப்டன் அப்ரிதி 3-வது இடத்திலும் உள்ளனர். இந்தியாவின் யுவராஜ் 4-வது இடத்தில் உள்ளார்.


பரிசு மழையில் நனையும் இந்திய வீரர்கள்

28 ஆண்டுகளுக்குப் பிறகு கோப்பையை வென்று பெருமை சேர்த்துள்ள இந்திய கிரிக்கெட் அணியினருக்கு வாழ்த்துகள், பாராட்டுகள் மட்டுமின்றி ஏராளமான பரிசுகளும் குவிந்து வருகின்றன.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ), மத்திய அரசு, பல்வேறு மாநில அரசுகள் ஆகியவை பரிசுகளை அறிவித்து வருகின்றன.
ஒவ்வொரு வீரருக்கும் ரூ.1 கோடி:
உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் இடம்பெற்றிருந்த ஒவ்வொரு வீரருக்கும் தலா ரூ.1 கோடி வழங்குகிறது பிசிசிஐ.
பயிற்சியாளர் கேரி கிர்ஸ்டன் மற்றும் அதிகாரிகளுக்கு ரூ.50 லட்சமும், தேர்வுக்குழுவினருக்கு ரூ.25 லட்சமும் வழங்கப்படும் என பிசிசிஐ தலைவர் சஷாங்க் மனோகர் அறிவித்துள்ளார்.
சச்சின், ஜாகீர்கானுக்கு ரூ.1 கோடி
மகாராஷ்டிர வீரர்கள் சச்சின், ஜாகீர்கான் ஆகியோருக்கு தலா ரூ.1 கோடி வழங்கப்படும் என்று அம் மாநில முதல்வர் பிருதிவிராஜ் சவாண் அறிவித்துள்ளார்.
யுவராஜ் சிங், ஹர்பஜன் சிங் ஆகியோருக்கு தலா ரூ.1 கோடி வழங்கப்படும் என்று பஞ்சாப் முதல்வர் சுக்பிர் சிங் பாதல் தெரிவித்துள்ளார்.
சேவாக், நெஹ்ரா ஆகியோருக்கு இந்த ஆண்டிற்கான சிறந்த விளையாட்டு விருது வழங்கப்படும் என்று ஹரியாணா அரசு அறிவித்துள்ளது.
ரயில்வே பாஸ்
இந்திய வீரர்களுக்கு ஆயுள்காலம் முழுவதும் இலவசமாக ரயிலில் (ஏ.சி. முதல் வகுப்பு) பயணம் செய்யலாம் என மத்திய ரயில்வே துறை அமைச்சர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.
டோனிக்கு ரூ. 2 கோடி
கேப்டன் டோனிக்கு ரூ.2 கோடியும், டில்லி வீரர்களான சேவாக், கம்பீர், நெஹ்ரா, கோலி ஆகியோருக்கு தலா ரூ.1 கோடியும் வழங்கப்படும் டில்லி முதல்வர் ஷீலா தீட்சித் அறிவித்துள்ளார்.
யுவராஜுக்கு "ஆடி' கார்
உலகக் கோப்பையில் மிகச்சிறப்பான பங்களிப்பை அளித்து தொடர் நாயகன் விருதுபெற்ற அதிரடி சகலதுறை ஆட்டக்காரர் யுவராஜுக்கு காரை பரிசாக வழங்குகிறது சொகுசுக் கார் தயாரிப்பில் முன்னணியில் உள்ள ஜெர்மனியைச் சேர்ந்த ஆடி நிறுவனம். கார் விரைவில் யுவராஜிடம் வழங்கப்படும் எனவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆடி காரைப் பரிசாக இரண்டாவது இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ். இதற்கு முன் 1985-ம் ஆண்டு அவுஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் இந்தியா வீழ்த்தியபோது, அப்போதைய சகலதுறை ஆட்டக்காரர் ரவி சாஸ்திரிக்கு ஆடி கார் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கர்நாடகத்தில் வீட்டுமனை
இந்திய வீரர்கள் அனைவருக்கும் பெங்களூர் பெருநகர வளர்ச்சி ஆணையத்தில் வீட்டுமனை வழங்கப்படும் என கர்நாடக முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா அறிவித்துள்ளார்.
பெங்களூரில் உள்ள சாலை ஒன்றுக்கு தோனியின் பெயரை சூட்டவுள்ளதாக மேயர் நடராஜ் தெரிவித்துள்ளார்.
டோனி பெயரில் மைதானம்
உத்தரகண்டில் கேப்டன் டோனி, சச்சின் ஆகியோருக்கு வீடு அல்லது வீட்டுமனை வழங்கப்படும் என்று அம்மாநில முதல்வர் ரமேஷ் பொக்ரியால் அறிவித்துள்ளார். டோனி பெயரில் விளையாட்டு மைதானமும் அமைக்கப்படவுள்ளது.
ஜார்க்கண்டில் நிலம்
இந்திய கேப்டன் டோனிக்கு அவரது சொந்த மாநிலமான ஜார்க்கண்டில் நிலம் வழங்கப்படவுள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
ஏர் இந்தியாவில் பதவி உயர்வு
ஏர் இந்தியா விமான நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் தோனி, யுவராஜ், ஹர்பஜன் சிங், சுரேஷ் ரெய்னா ஆகியோருக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளதாக ஏர் இந்தியா தலைவரும், நிர்வாக இயக்குநருமான அரவிந்த் ஜாதவ் தெரிவித்தார்.
ஆனால் பதவி உயர்வு குறித்த விவரங்களை தெரிவிக்க அவர் மறுத்து விட்டார்.
டோனி ராஞ்சியில் ஏர் இந்தியா அலுவலகத்தில் துணை மேலாளராக உள்ளார். அவருக்கு மேலாளராக பதவி உயர்வு வழங்கப்படலாம். யுவராஜ் சிங் சண்டீகர் அலுவலகத்தில் மேலாளராக உள்ளதால், முதுநிலை மேலாளராக பதவி உயர்வு பெறக்கூடும். துணை மேலாளராக உள்ள ஹர்பஜன் (அமிருதசரஸ்), ரெய்னா (டில்லி) ஆகியோருக்கு மேலாளராக பதவி உயர்வு வழங்கப்படும் என்று தெரிகிறது.
முனாப், பதானுக்கு விருது
குஜராத் மாநில வீரர்கள் முனாப் படேல், யூசுப் பதான் ஆகியோருக்கு விளையாட்டுத் துறையில் வழங்கப்படும் மிக உயரிய விருதான இகல்வயா விருது வழங்கப்படும் என குஜராத் அரசு அறிவித்துள்ளது. இந்த விருதுடன் ரூ.1 லட்சம் ரொக்கப் பரிசும் வழங்கப்படும்.
வீரர்களுக்கு நிலம்
கோப்பையை வென்ற இந்திய வீரர்கள், பயிற்சியாளர் ஆகியோருக்கு தலா 300 சதுர அடி நிலம் வழங்குவதாக ராஜ்கோட்டைச் சேர்ந்த கட்டுமான நிறுவன அதிபர் பூபட் போடார் தெரிவித்துள்ளார்.
ரெய்னா, சாவ்லாவுக்கு விருது
இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிக்கு உதவிய உத்தரப் பிரதேச வீரர்கள் சுரேஷ் ரெய்னா, பியூஷ் சாவ்லாவுக்கு கன்ஷிராம் சர்வதேச விளையாட்டு விருது வழங்கப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
இந்திய அணி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியதற்கும், கோப்பையை வென்றதற்கு ரெய்னா, சாவ்லாவின் பங்களிப்பு முக்கியமானது. அவர்களால் உத்தரப் பிரதேசமே பெருமையடைகிறது என மாநில முதல்வர் மாயாவதி தெரிவித்துள்ளார்.மேலும் அவர்களுக்கு பாராட்டு விழா நடத்தி விருது வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது அவர்களை ஊக்கப்படுத்துவதற்காக மட்டுமின்றி, வரும் காலத்தில் மிகுந்த அர்ப்பணிப்பு உணர்வோடு விளையாடுவதற்கு உதவும் வகையில் வழங்கப்படுகிறது என்று கூறியுள்ளார்.



ஓய்வு பெறும் எண்ணம் இல்லை: சச்சின் டெண்டுல்கர்

ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வுபெறும் உடனடித் திட்டம் எதுவும் இல்லை என்று இந்தியாவின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.
இப்போதும் ஆட்டத்தை ரசித்து விளையாடுகிறேன். கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறும் திட்டம் எதுவும் இல்லை. அப்படி ஒரு எண்ணம் ஏற்பட்டால், அதை மறைக்கமாட்டேன். உங்களிடம் நேரடியாகத் தெரிவிப்பேன்.
தொடர்ந்து மகிழ்ச்சியாக விளையாடவே விரும்புகிறேன். கிரிக்கெட்டின் மீதான ஈர்ப்பு குறைந்துவிடவில்லை. இன்னும் மிகுந்த ஆர்வத்தோடு விளையாடுகிறேன். நீண்டகாலமாக விளையாடிவிட்டேன். ஆனாலும் கிரிக்கெட்டிலும் விலகுவதற்கான எந்தக் காரணமும் ஏற்பட்டுவிடவில்லை.
மிகவும் ரசித்து விளையாடுவதற்கான நேரம் இது. அதனால் தொடர்ந்து விளையாடுவேன் என்றார். இன்னும் 5 ஆண்டுகள் கழித்து நீங்கள் எப்படி இருப்பீர்கள் என்று கேட்டபோது, இப்போதுள்ள சச்சினாகவே இருப்பேனா என்பது தெரியாது. அடுத்த உலகக் கோப்பையில் விளையாடுவேனா என்பதும் தெரியாது. இருப்பினும் இப்போது மகிழ்ச்சியோடு விளையாடி வருகிறேன். இது போன்று தொடர்ந்து விளையாடுவேன் என்றார்.
முன்பு கோப்பையை வென்ற அணிக்கும், இப்போதைய அணிக்கும் என்ன வித்தியாசம் என்று கேட்டபோது, இப்போதுள்ளது சிறந்த மேட்ச் வின்னர் அணி. அனுபவம், இளமை என சமபலம் மிக்க அணி என்றார்.


இந்திய ஊடகங்கள் மீது அப்ரிதி பாய்ச்சல்
இந்திய ஊடகங்கள் பாரபட்சத்துடன் நடந்து கொள்கிறது. இவற்றுடன் ஒப்பிடும் போது, நமது ஊடகங்கள் நூறு மடங்கு சிறந்தது, என பாகிஸ்தான் அணி கப்டன் அப்ரிதி தெரிவித்துள்ளார்.
உலக கோப்பை அரையிறுதியில் தோற்ற பின், இந்தியா மீது மட்டும் ஏன் இவ்வளவு வெறுப்பாக உள்ளீர்கள் எனத் தெரியவில்லை, என அப்ரிதி தெரிவித்து இருந்தார். தற்போது, அப்படியே மாற்றி பேசியுள்ளார்.
இஸ்லமாபாத்தில் ஒரு தொலைகாட்சிக்கு அளித்த பேட்டியில் அப்ரிதி கூறியது: இந்தியாவில் உள்ள அனைத்து ஊடகங்களும் பாரபட்சத்துடன் நடந்து கொள்கிறது. இவற்றுடன் ஒப்பிடும் போது, நமது ஊடகங்கள் நூறு மடங்கு சிறந்தது. இவர்களால் தான் இரு நாடுகளின் உறவுகள் சீர்கெட்டுப் போயுள்ளன.
அதே போல இந்திய மக்களுக்கு, நம்மைப் போல பெரிய மனது கிடையாது. இவர்களுடன் இணைந்து வாழ்வது கடினம். நீண்ட கால உறவு என்பதெல்லாம் சாத்தியமே இல்லை. 60 ஆண்டுகளாக பேச்சுவார்த்தை நடத்தியும் எந்தப் பயனும் இல்லை.
இந்தியாவும், பாகிஸ்தானும் சண்டை போட்டுக்கொள்ளக் கூடாது என்று தான் விரும்புகிறோம். இதை மூன்றாவதாக ஒரு நாடு தடுக்கிறது என்பது எல்லோருக்கும் தெரியும். அவர்கள் நட்பாக இருக்க விடமாட்டார்கள்.
காம்பிர் மோசம்: பாகிஸ்தானை வென்றதை மும்பை பயங்கரவாத தாக்குதலில் இறந்தவர்களுக்கு காணிக்கை ஆக்குகிறேன் என்கிறார் காம்பிர். இவரிடம் இருந்து இக்கருத்தை நான் எதிர்பார்க்கவில்லை. மும்பையின் மீது நடந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களா காரணம்.
என் குடும்ப நண்பர்கள், தந்தை, முன்னாள் வீரர்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, வெஸ்ட் இண்டீஸ் தொடரில் பங்கேற்க போகிறேன், இவ்வாறு அப்ரிதி தெரிவித்தார்.


என்னை விமர்சித்ததால் ஆவேசமாக ஆடினேன்: கவுதம்
உலக கிண்ண அணியில் ஆடிய கவுதம் காம்பீர் தனது சொந்த ஊரான டெல்லி திரும்பினார். டெல்லி விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஏராளமான ரசிகர்கள் திரண்டிருந்தனர். அவர்கள் காம்பீரை பார்த்ததும் வாழ்த்து கோஷம் எழுப்பினார்கள். பின்னர் காம்பீர் டெல்லி ராஜேந்திர நகரில் உள்ள தனது வீட்டுக்கு சென்றார். அங்கும் ஏராளமானோர் திரண்டு நின்று வரவேற்றனர்.
கவுதம் காம்பீர் நிருபர்களிடம் கூறியதாவது: 2007 உலக கிண்ண அணியில் இடம் பெற வேண்டும் என்று மிகவும் விரும்பினேன். ஆனால் எனக்கு அதில் இடம் கிடைக்கவில்லை. எனக்கு அது ஏமாற்றமாக அமைந்தது.
எனவே இந்த உலக கிண்ணப் போட்டியில் எப்படியும் இடம் பெற வேண்டும் என்று ஆசைப்பட்டேன். எனக்கு இடம் கிடைத்தது. வாழ்நாளில் ஒரு தடவை தான் இதுபோன்ற வாய்ப்பு கிடைக்கும். நான் ஆடிய அணி உலக கோப்பையை வென்று இருப்பது எனக்கு அளவு கடந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.
இறுதி ஆட்டத்தில் நான் எனது வழக்கமான ஆட்டத்தை தான் வெளிப்படுத்தினேன். இக்கட்டான நேரத்தில் இறங்கிய எனக்கு கோக்லி பக்கபலமாக இருந்தார். அதே போல அடுத்து வந்த டோனியும் எனக்கு துணையாக இருந்தார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினோம். சில நேரங்களில் நான் விமர்சனத்துக்கு ஆளாகினேன். உலக கிண்ணப் போட்டியில் சில ஆட்டத்திலும் நான் விமர்சிக்கப்பட்டேன்.
இந்த விமர்சனமே என்னை ஆவேசமாக ஆட வைத்தது. விமர்சனங்கள் தான் எனக்கு எப்போதுமே உதவியாக இருக்கிறது. ரசிகர்கள் எல்லோருமே நம்மிடம் சில விடயங்களை எதிர்பார்ப்பார்கள். அதை நிறைவேற்றாத போது விமர்சனங்கள் வரும்.
இதை நாம் சாதகமாக எடுத்துக் கொள்ள வேண்டும். இந்தியா உலக கோப்பையை வென்றதற்கு பயிற்சியாளர் கிர்ஸ்டலுக்கு முக்கிய பங்கு உண்டு. அவர் தான் சிறப்பான அணியை உருவாக்கினார். இவ்வாறு அவர் கூறினார்.


இந்தியர்களைப் பற்றி நான் அப்படிக் கூறவில்லை: அப்ரிதி மறுப்பு
இந்தியர்களுக்கு பரந்த மனப்பான்மை இல்லை என பாகிஸ்தானின் ஒருநாள் கிரிக்கெட் போட்டி கப்டன் அப்ரிதி கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது. 
இந்நிலையில், தான் கூறியது தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது என அவர் திடீரென மறுப்பு தெரிவித்துள்ளார்.
சிறிய விவகாரங்களை ஊடகங்கள் பெரிதாக்குகின்றன. இது அவமானம். இந்தியா-பாகிஸ்தான் இடையேயான உறவை முன்னேற்ற என்னாலான சிறு முயற்சியை எப்போதும் செய்து வருகிறேன். ஆனால் சில சம்யம் நாம் ஒன்று சொல்லும் போது அது வேறு ஒன்றாக மாற்றப்படுகிறது. நான் சொல்லாததை சொன்னதாகக் கூறியுள்ளனர் என அப்ரிதி தெரிவித்தார்.
இந்தியாவில் கிரிக்கெட்டை மிகவும் ரசித்தேன். இந்திய மக்களை நேசிக்கிறேன். என்னுடைய கருத்துக்களை எதிர்மறையாக எடுத்துக்கொள்ள வேண்டாம். இந்திய ரசிகர்கள் என் மீது எப்போதும் ஏராளமான அன்பும், பாசமும் வைத்துள்ளனர். ஊடகங்கள் இது போன்று அற்பமான விவகாரங்களில் காலத்தை வீணடிக்க வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறேன் என்று அப்ரிதி கூறினார்.
உலகக் கோப்பை வெற்றியை மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அர்ப்பணிப்பேன் என கெளதம் கம்பீர் கூறியது குறித்து அப்ரிதியிடம் கேட்ட பின்னரே அவர் இந்தியா-பாகிஸ்தான் உறவு குறித்து அவ்வாறு கூறியதாக அப்ரிதியின் நெருங்கிய நண்பர் ஒருவர் தெரிவித்தார்.


தரவரிசையில் இந்தியா 2வது இடம்

இந்தியா ஒரு நாள் போட்டிக்கான அணிகளின் தரவரிசையில் 2 வது இடத்திலேயே (121 புள்ளிகள்) நீடிக்கிறது.
முன்னாள் சாம்பியன் அவுஸ்திரேலியா 128 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடம் வகிக்கிறது.
இலங்கை அணி 3 வது இடத்திலும் (118 புள்ளி), தென்ஆப்பிரிக்கா 4 வது இடத்திலும் (116 புள்ளி), இங்கிலாந்து 5 வது இடத்திலும் (105 புள்ளி), பாகிஸ்தான் (103 புள்ளி) 6 வது இடத்திலும், நிழூசிலாந்து அணி 7 வது இடத்திலும் (94 புள்ளி), வெஸ்ட் இண்டீஸ் அணி 8 வது இடத்திலும் (68 புள்ளி) உள்ளன.



ஐபிஎல்4: ராயல் சேலஞ்சர்ஸ் அணியை வழிநடத்தவிருக்கும் வெட்டோரி

ஐபில்-4ம் சீசனில் விளையாடும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் கப்டனாக நியூசிலாந்து அணியின் முன்னாள் கப்டன் டேனியல் வெட்டோரி நியமிக்கப்பட்டுள்ளார்.
வரும் 8-ம் திகதி ஐபிஎல்-4ம் சீசன் துவங்குகிறது. கடந்த 2 சீசன்களாக பெங்களூர் அணியின் கப்டனாக அணில் கும்ப்ளே இருந்தார். அவர் தற்போது பெங்களூர் அணிக்கு அறிவுரைகள் மட்டும் வழங்குவார்.
இந்நிலையில் உலகக் கோப்பையில் நியூசிலாந்து அணியை காலிறுதி வரை அழைத்துச் சென்ற டேனியல் வெட்டோரி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் கப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். இது குறி்த்து அணியின் உரிமையாளர் விஜய் மல்லையா கூறியதாவது, வரவிருக்கும் சீசனை நினைத்து சந்தோஷமாக இருக்கிறோம். வெட்டோரி ஒரு அனுபவம் வாய்ந்த மற்றும் மரியாதைக்குரிய கப்டன். அவர் தலைமையில் இந்த சீசனில் வெற்றி பெறுவோம் என்று நம்புகிறோம் என்றார்.
வெட்டோரி எங்கள் அணியின் கப்டனாக கிடைத்துள்ளது மிகவும் அருமையானது என்று ராயல் சேலஞ்சர்ஸ் ஸ்போர்ட்ஸ் லிமிடெட்டின் தலைவரும், மல்லையாவின் மகனுமான சித்தார்த் மல்லையா தெரிவித்தார்.
வழக்கம் போல் இந்த அணியின் பிரபல நட்சத்திரமாக நடிகை தீபிகா படுகோன் விளங்குவார் என்று தெரிகிறது.


கபில்தேவ் அணியை விட தோனி அணிக்கு 60 மடங்கு பரிசு

உலக கிண்ணத்தை வென்ற இந்திய அணிக்கு பரிசு மழை கொட்டி வருகிறது. கிரிக்கட் வாரியம் தனியாக பரிசுகளை அறிவித்துள்ளது.
இந்நிலையில் ஒவ்வொரு மாநில அரசுகளும், அமைப்புகளும் போட்டி போட்டுக் கொண்டு பரிசுகளை அறிவித்து வருகின்றன. 1983 ம் ஆண்டு கபில்தேவ் தலைமையிலான அணி உலக கோப்பையை வென்ற போதும் வீரர்களுக்கு ஏராளமான பரிசுகள் கிடைத்தன. அப்போது ஒவ்வொரு வீரர்களுக்கும் ரூ.14 லட்சம் வரை மட்டுமே பரிசு கிடைத்தது.
ஆனால் இப்போது ஒவ்வொரு வீரர்களுக்கும் கிடைத்துள்ள பரிசுகள் சுமார் ரூ.4 கோடியில் இருந்து ரூ.8 கோடி வரை வருகிறது.
அதாவது கபில்தேவ் அணிக்கு கிடைத்த பரிசுகளை விட இப்போது இந்திய அணிக்கு 60 மடங்கு அதிக அளவில் பரிசு கிடைத்து இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது.


தோனி கிராமத்திற்கு புதிய சாலை: உத்தரகாண்ட் முதல்வர் அறிவிப்பு

உலகக் கோப்பையை வென்ற தோனியை கௌரவிக்கும் வகையில் அவர் சொந்த ஊருக்கு புதிய சாலை அமைத்து தருவதாக உத்தரகாண்ட் முதல்வர் அறிவித்துள்ளார்.
28 ஆண்டுகள் கழித்து கிரிக்கெட் உலகக் கோப்பையை இந்திய அணி வென்றுள்ளது. இந்த சாதனையை நாடே கொண்டாடிக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில் இந்தியாவுக்கு பெருமைத் தேடித்தந்துள்ள வீரர்களுக்கு பரிசுகள் குவிந்த வண்ணம் உள்ளன. சச்சினுக்கும், தோனிக்கும் முசோரியில் பிளாட் அல்லது வீடு வழங்கப்படும் என்று உத்தரகண்ட் முதல்வர் ரமேஷ் போக்ரியால் நிஷாங்க் ஏற்கனவே அறிவித்திருந்தார்.
இந்நிலையில் அல்மோரா மாவட்டத்தில் உள்ள தோனியின் சொந்த கிராமமான ல்வாலிக்கு புதிய சாலை அமைத்துத் தருவதாக அவர் மேலும் அறிவித்துள்ளார். இந்த கிராமத்தில் சுமார் 60 குடும்பங்கள் வாழ்கின்றன. இங்கு புதிய சாலை அமைத்து தருமாறு தோனியின் உறவினர்களும், கிராமத்தினரும் அரசை பல ஆண்டுகளாக வலியுறுத்தி வந்தனர். அவர்களின் கோரிக்கை தற்போது தோனி மூலமாக நிறைவேறியுள்ளது.


தோனி சிக்ஸர் விலாசிய பந்து ஏலத்தில் விடப்படுகிறது

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி போட்டியில் வின்னிங் ஷோட் அடித்த தோனி, பந்தை சிக்ஸருக்கு விரட்டினார்.
அந்த பந்துக்கு இப்போது மவுசு அதிகரித்துள்ளது.
21 லட்சம் ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்க போட்டா போட்டி எழுந்துள்ளது. நாளையுடன் ஏலம் முடிவடைகிறது.
இது வரை 52 பேர் ஏலம் கோரியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.



தோனிக்கு டாக்டர் பட்டம்

உலக கோப்பையை வென்றதற்காக கப்டன் தோனிக்கு பல்வேறு மாநிலங்களும் போட்டி போட்டு பரிசுகளை வழங்கி வருகின்றன.
அவரது சொந்த மாநிலமான ஜார்கண்டில் அவருக்கு டாக்டர் பட்டம் வழங்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
இதுகுறித்து ஜார்கண்ட் மாநில மனிதவளத்துறை மந்திரி பைஜந்த்ராம் கூறியதாவது: மாநில மனிதவளத்துறை சார்பில் கப்டன் தோனிக்கு டாக்டர் பட்டம் வழங்க திட்டமிட்டுள்ளோம். இதுபற்றி முதல் மந்திரி அர்ஜுன் முண்டாவிடம் விவாதிக்கப்படும்.
இது தொடர்பான விதிமுறைகள் குறித்து மாநில பல்கலைக்கழகங்களில் ஆலோசனை நடத்துவோம். அதைத் தொடர்ந்து அவருக்கு டாக்டர் பட்டம் வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். 


கிறிஸ்டனை எனது தந்தை ஸ்தானத்தில் வைத்துள்ளேன்: யுவராஜ்
உலக கோப்பையை இந்தியா வென்ற கையோடு, பயிற்சியாளர் கிரிஸ்டன் தனது பணியில் இருந்து விலக உள்ளார்.
இதுகுறித்து யுவராஜ்சிங் கூறியதாவது: கிரிஸ்டனை நாங்கள் இழப்பது வருத்தமாக உள்ளது. எனினும் அவருக்கென்று குடும்பம் உள்ளது. அவர் எடுத்த முடிவை நாங்கள் மதிக்கிறோம்.
எனது தந்தை ஸ்தானத்தில் கிரிஸ்டனை வைத்திருந்தேன். தனிப்பட்ட முறையில் அவர் இல்லாதது எனக்கு இழப்பு தான்.
தொடர்ந்து அவர் எங்களுடன் செயல்பட்டால் சிறப்பாக இருக்கும் என்றார். சச்சின் கூறுகையில்,"கிரிஸ்டன் சில காலம் அணியில் நீடித்தால் நன்றாக இருக்கும். அவரது இழப்பை ஈடுகட்டுவது கடினம்" என்றார்.


அணியின் தலைமைப் பதவியிலிருந்து விலகும் குமார் சங்கங்கார
எதிர்வரும் ஜூன் மாதம் இங்கிலாந்து சுற்றுலாவின் பின்னர் இலங்கைக் கிரிக்கெட் அணியின் தலைவர் பதவியிலிருந்து தான் விலகவுள்ளதாக குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இலங்கைக் கிரிக்கெட் சபை அதிகாரிகளுக்கு ஏற்கெனவே தான் அறிவித்துள்ளதாகவும் அவர் கூறினார்.
எனினும், தற்போதைக்கு போட்டிகளிலிருந்து ஓய்வு பெறும் திட்டமில்லை எனவும் 'இன்னும் 2-3 வருடங்களுக்கு நான் விளையாடுவேன்' எனவும் அவர் கூறியுள்ளார்.

இலங்கை அணிக்கே அதிக வாய்ப்பு உண்டு: ரணதுங்கா
இலங்கை அணிக்கு உலக கோப்பை வெல்லும் வாய்ப்பு அதிகம் உள்ளது என முன்னாள் கப்டன் அர்ஜுனா ரணதுங்கா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இந்தியா, இலங்கை, வங்கதேச மண்ணில் பத்தாவது உலக கிண்ணக் கிரிக்கெட் தொடர் நடக்கிறது. வரும் 26 ம் திகதி கொழும்புவில் உள்ள பிரேமதாசா மைதானத்தில் நடக்கும் 4 வது காலிறுதியில் இலங்கை, இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.
இதுகுறித்து கடந்த 1996 ல் இலங்கை அணிக்கு உலக கோப்பை பெற்றுத் தந்த அர்ஜுனா ரணதுங்கா கூறியதாவது: லீக் சுற்றில் இலங்கை அணி சிறப்பாக செயல்பட்டது. இது அடுத்து வரவுள்ள நாக்அவுட் சுற்றிலும் தொடரும் என நம்புகிறேன். இம்முறை இலங்கை அணிக்கு உலக கோப்பை வெல்லும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
இதற்கு காலிறுதி மற்றும் அரையிறுதிப் போட்டிகளை சொந்த மண்ணில் விளையாட இருப்பது சாதகமான விஷயம். ஆசிய மண்ணில் இலங்கை அணியினர் சிறப்பாக விளையாடக் கூடியவர்கள். எனவே எங்கு விளையாடுகிறோம் என்பது பெரிய கவலை அளிக்காது.
ஏனெனில் கடந்த 1996 ல் கோப்பை வென்ற இலங்கை அணி காலிறுதிப் போட்டியை பைசலாபாத்திலும், அரையிறுதிப் போட்டியை கோல்கட்டாவிலும் விளையாடியது. இங்கிலாந்து வீரர்கள் சுழலில் திணறக் கூடியவர்கள். இருப்பினும் இங்கிலாந்து கப்டன் ஸ்டிராஸ், டிராட் உள்ளிட்டோர் பேட்டிங்கில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
எனவே இவர்களுக்கு மிகுந்த கவனமுடன் பந்துவீச வேண்டும். முரளிதரன், மெண்டிஸ், தில்ஷன் உள்ளிட்ட திறமையான சுழற்பந்து வீச்சாளர்கள் இருப்பது பலம். இப்போட்டியில் டாப்ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ரன் மழை பொழிய வாய்ப்பு உள்ளது.
ஆனால் மிடில்ஆர்டர் கவலை அளிக்கிறது. இதனை சரி செய்யும் பட்சத்தில் இங்கிலாந்து அணிக்கு வலுவான இலக்கை நிர்ணயிக்கலாம்.


உலக கிண்ணப் போட்டியின் முக்கிய அம்சங்கள்....
இந்த உலகக் கிண்ணத்தில் இதுவரை 20 சதங்கள் அடிக்கப்பட்டுள்ளன. சச்சின், டிவில்லியர்ஸ், ரையான் ரென் டஸ்சாத்தே ஆகியோர் தலா 2 சதங்கள் அடித்துள்ளனர். சச்சின் மொத்தமாக ஆறு சதமடித்துள்ளார்.
தனிநபர் அதிகபட்சம்: சேவாக் 175 ஓட்டம்(பங்களாதேஷக்கு எதிராக).
அதிக முறை டக்அடுட்: ஷெம் கோச்சே(கென்யா), ஹபியுல் இஸ்லாம்(பங்களாதேஷ்) ஆகியோர் தலா 3 முறை டக் அவுட்.
அணியின் அதிகபட்சம்: இந்தியா 370/4 (பங்களாதேஷக்கு எதிராக).
அணியின் குறைந்தபட்சம்: பங்களாதேஷ் 58 அனைத்து விக்கெட்டும் இழப்பு(மேற்கிந்தியதீவுகளுக்கு எதிராக).
அதிக ஓட்டங்கள்: இலங்கை கப்டன் சங்ககாரா(363 ஓட்டங்கள், 6 லீக் ஆட்டங்கள்).
அதிக விக்கெட்டுகள்: பாகிஸ்தான் கப்டன் அப்ரிடி(17 விக்கெட்டுகள், 6 லீக் ஆட்டங்கள்).
சிறந்த பந்து வீச்சு: மேற்கிந்திய வீரர் கெமர் ரோச் 6/27(நெதர்லாந்துக்கு எதிராக).
ஹாட்ரிக் சாதனை: மேற்கிந்திய வீரர் கெமர் ரோச்( நெதர்லாந்துக்கு எதிராக), இலங்கை வீரர் மலிங்கா(கென்யாவுக்கு எதிராக).
அதிக கேட்ச் பிடித்தவர்கள்: இலங்கை வீரர் ஜெயவர்த்தன, மேற்கிந்திய வீரர் போலார்ட்(தலா 6 கேட்ச்கள்).
மொத்த பவுண்டரிகள்: 1627(42 லீக் ஆட்டங்களில்).
மொத்த சிக்சர்கள்: 234(42 லீக் ஆட்டங்களில்).
அதிக சிக்சர் அடித்த அணி: நியூசிலாந்து,மேற்கிந்தியா(தலா 32)
சிறந்த வெற்றி: 231 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தென்னாபிரிக்கா வெற்றி(நெதர்லாந்து எதிராக), நியூசிலாந்து அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் இரண்டு முறை வெற்றி(கென்யா, சிம்பாப்வேக்கு எதிராக).
அதிகபட்ச சேசிங்: அயர்லாந்து 329/7(இங்கிலாந்துக்கு எதிராக)
லீக் ஆட்டத்தில் எல்லா அணிகளும் குறைந்தபட்சம் ஒரு தோல்வியையாவது கண்டுள்ளன. உலகக் கிண்ணத்தில் தொடர்ந்து 34 போட்டிகளில் தோல்வியை சந்திக்காத அவுஸ்திரேலியா அணி கூட பாகிஸ்தானிடம் தோல்வியடைந்தது.கென்யா, நெதர்லாந்து அணிகள் ஒரு வெற்றி கூடப்பெறாது வெறுங்கையுடன் வெளியேறின.
உலகக் கிண்ணத்தில் 2000 ஓட்டங்களை கடந்த முதல் வீரர் என்ற பெருமையைப் பெற்றார் சச்சின். அயர்லாந்து வீரர் கெவின் ஒபிரைன் 50 பந்துகளில் சதமடித்து சாதனை படைத்தார். இதற்கு முன் அவுஸ்திரேலியாவின் ஹைடன் 66 பந்துகளில் சதமடித்ததே சாதனையாக இருந்தது.
இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் இரண்டாவதாக ஆடி 329 ஓட்டங்களை எட்டிப்பிடித்து வெற்றி பெற்றது அயர்லாந்து. இதுவே உலகக் கிண்ண வரலாற்றில் ஒரு அணி சேஸ் செய்த அதிக ஓட்டங்கள் ஆகும்.
உலகக் கிண்ண வரலாற்றில் தொடர்ச்சியாக 3 முறை 4 விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்ற சாதனைக்கு சொந்தக்காரரானார் பாகிஸ்தான் கப்டன் அப்ரிடி.


நடப்பு சம்பியனை ஓரம் கட்டி அரையிறுதிக்கு இந்தியா தகுதி
உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற இரண்டாவது காலிறுதிப் போட்டியில் இந்திய அணி அவுஸ்திரேலியாவை 5 விக்கெட்டுகளால் தோற்கடித்தது.
அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி, பாகிஸ்தான் அணியை எதிர்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அஹமதாபாத்தில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 260 ஓட்டங்களைப் பெற்றது. அணித்தலைவர் ரக்கி பொன்டிங் 104 ஓட்டங்களைப் பெற்றார். ஒருநாள் சர்வதேச போட்டிகளில் பொன்டிங் பெற்ற 30 ஆவது சதமாகும். பிரட் ஹடின் 53 ஓட்டங்களைப் பெற்றார்.
இந்திய பந்துவீச்சாளர்களில் அஸ்வின் ஸஹீர்கான் யுவராஜ் சிங் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இந்திய அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் வீரேந்தர் ஷேவாக் 15 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் ஆட்டமிழந்தார். அதன்பின் சச்சின் டெண்டுல்கர் 53 ஓட்டங்களையும் கௌதம் காம்பீர் 50 ஓட்டங்களையும் பெற்றனர். வீரட் கோலி 24 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.
அணித்தலைவராக தனது 100 ஆவது போட்டியில் விளையாடிய மஹேந்திர சிங் டோனி 7 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்தபோது இந்திய அணி 38 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 187 ஓட்டங்களை மாத்திரமே பெற்றிருந்தது.
எனினும் யுவராஜ் சிங்கும் சுரேஷ் ரெய்னாவும் இந்திய அணியின் ஓட்ட வேகத்தை அதிகரிக்கத் தொடங்கினர்.
இவ்விருவரின் சிறப்பான துடுப்பாட்டத்தின் உதவியுடன் இந்திய அணி 47.2 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
யுவராஜ் சிங் ஆட்டமிழக்காமல் 57 ஓட்டங்களைப் பெற்றார். சுரேஷ் ரெய்னா 28 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 34 ஓட்டங்களைப் பெற்றார்.
1987 ஆம் ஆண்டு உலகக்கிண்ணத்தை முதல் தடவையாக வென்ற அணி அதன்பின் 1999, 2003, 2007 ஆம் ஆண்டுகளிலும் சம்பியனாகியிருந்தது. இம்முறை காலிறுதிப் போட்டியுடன் அவ்வணி வெளியேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

டாக்டர் பட்டம் ஏற்க சச்சின் மறுப்பு
மைசூர் பல்கலைக்கழகம் வழங்கவிருந்த கௌரவ டாக்டர் பட்டத்தை ஏற்க இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பல்கலைக்கழக துணை வேந்தருக்கு சச்சினின் மனைவி அஞ்சலி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அதில் சச்சினுக்கு டாக்டர் பட்டம் அறிவித்ததற்கு நன்றி தெரிவித்துள்ள அஞ்சலி, சச்சின் கிரிக்கெட்டில் விளையாடிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் எந்தவொரு டாக்டர் பட்டத்தையும் ஏற்பதில்லை என முடிவு செய்துள்ளார். அதனால் தாங்கள் வழங்கவிருந்த டாக்டர் பட்டத்தை ஏற்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.
மைசூர் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா ஏப்ரல் 10-ம் தேதி நடைபெறவுள்ளது. அப்போது கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு டாக்டர் பட்டம் வழங்கப்படும் என்று அப்பல்கலைக்கழகம் அறிவித்திருந்தது.


இன்று தென் ஆப்பிரிக்கா-நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை
வங்கதேச தலைநகர் டாக்காவில் வெள்ளிக்கிழமை நடைபெறும் மூன்றாவது காலிறுதி ஆட்டத்தில் நியூசிலாந்தைச் சந்திக்கிறது தென் ஆப்பிரிக்கா.
இந்த உலகக் கோப்பையில் மிகவும் பலம் வாய்ந்த அணியாக தென் ஆப்பிரிக்கா உள்ளது. நியூசிலாந்து சற்று பலம் குறைந்த அணியாகவே கருதப்படுகிறது. அந்த அணி தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை.
இந்த முறை எப்படியாவது கோப்பையை வென்றுவிட வேண்டும் என்ற முனைப்பில் களமிறங்கும் தென் ஆப்பிரிக்க அணியில் பேட்டிங்கில் ஆம்லா, காலிஸ், டிவில்லியர்ஸ், ஜே.பி.டுமினி என வலுவான வரிசையைக் கொண்டுள்ளது. டிவில்லியர்ஸ் அதிரடியாக விளையாடி ஆட்டத்தின் போக்கை மாற்றக்கூடிய வீரராக வலம் வருகிறார். அதேசயம் அந்த அணியின் கேப்டன் ஸ்மித் தொடர்ந்து தடுமாறி வருகிறார். இதுவரை 6 ஆட்டங்களில் விளையாடியுள்ள அவர் 155 ரன்களே குவித்துள்ளார். இதனால் அவர் சிறப்பாக விளையாட வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.
பந்துவீச்சில் வேகத்தில் டேல் ஸ்டெயின், மோர்ன் மோர்கல், சோட்சோபி ஆகியோர் நல்ல பார்மில் உள்ளனர். சுழற்பந்துவீச்சில் இம்ரான் தாஹிர், ராபின் பீட்டர்சன், போத்தா என வலுவாகவே உள்ளது. பீட்டர்சன் 14 விக்கெட்டுகளையும், தாஹிர் 12 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளனர். தென் ஆப்பிரிக்க பந்துவீச்சாளர்கள் நியூசிலாந்து பேட்ஸ்மேன்களுக்கு கடும் நெருக்கடி ஏற்படுத்தக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நியூசிலாந்து அணியைப் பொறுத்தவரையில் பேட்டிங்கில் மெக்கல்லம், கப்டில், ராஸ் டெய்லர் ஆகியோரை நம்பியே உள்ளது. இவர்கள் தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த தவறிவிடுகின்றனர். கடைசி இரண்டு லீக் ஆட்டங்களில் விளையாடாத கேப்டன் வெட்டோரி மீண்டும் அணிக்கு திரும்புவது பந்துவீச்சில் மட்டுமின்றி பேட்டிங்கிலும் வலுசேர்க்கிறது.
பந்துவீச்சில் கெய்ல் மில்ஸ், டிம் செüதி, ஜேக்கப் ஓரம் ஆகியோர் சிறப்பாக வீசி வருகின்றனர். சுழற்பந்துவீச்சாளர் ஹமிஸ் பென்னட்டுக்குப் பதிலாக டேரில் டஃப்பி அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். தென் ஆப்பிரிக்கா பலம் வாய்ந்த அணியாக இருந்தாலும் ஒவ்வொரு உலகக் கோப்பையிலும் அந்த அணி 1 ரன் வித்தியாசம், டக்வொர்த் லீவிஸ் என துரதிர்ஷ்டவசமாக போட்டியிலிருந்து வெளியேறியுள்ளது. அதனால் இந்த முறை அந்த அணி சற்று எச்சரிக்கையுடன் களமிறங்கும்.
உலகக் கோப்பையில் இதுவரை...
இவ்விரு அணிகளும் உலகக் கோப்பையில் இதுவரை 5 முறை மோதியுள்ளன. அதில் 3 முறை நியூசிலாந்தும், 2 முறை தென் ஆப்பிரிக்காவும் வெற்றி கண்டுள்ளன. ஒருநாள் போட்டியில் இவ்விரு அணிகளும் 51 முறை மோதியுள்ளன. இதில் 30 ஆட்டங்களில் தென் ஆப்பிரிக்காவும், 17 ஆட்டங்களில் நியூசிலாந்தும் வெற்றி கண்டுள்ளன. 4 ஆட்டங்களில் முடிவு எட்டப்படவில்லை.
சுழற்பந்து வீச்சுக்கே முக்கியத்துவம்
நியூசிலாந்துக்கு எதிரான காலிறுதி ஆட்டத்தில் சுழற்பந்து வீச்சாளர்களுக்கே முக்கியத்துவம் கொடுப்போம் என்று தென் ஆப்பிரிக்க கேப்டன் ஸ்மித் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியது:
எங்கள் அணியில் மூன்று சுழற்பந்துவீச்சாளர்களும் வெவ்வேறு விதமாக பந்துவீசுகின்றனர். ஆனாலும் அவர்கள் 3 பேரும் இணைந்து சிறப்பாக பந்துவீசுகின்றனர். அவர்களின் பங்கு அளப்பரியது. இம்ரான் தாஹிர் சுழற்பந்துவீச்சாளர்களில் மிக முக்கியமானவர்.
பீட்டர்சன் நீண்ட காலமாக விளையாடி வந்தாலும், உலகக் கோப்பையில் மிகுந்த நம்பிக்கையோடு விளையாடி வருகிறார். இங்குள்ள மைதானம் சுழற்பந்துவீச்சாளர்களுக்கு ஏற்றது. அவர்கள் தங்களின் திறமையை வளர்த்துக் கொள்ள இங்குள்ள மைதானங்கள் உகந்தவை. எல்லா வீரர்களுமே சிறப்பாக விளையாடி வருவதால் வீரர்களை தேர்வு செய்வது கடிமானது.
நியூசிலாந்து அணி மிகச்சிறந்த அணி. அந்த அணியின் முன்வரிசை பேட்ஸ்மேன்கள் மிகச்சிறந்த வீரர்கள். அவர்கள் ஆட்டத்தின் போக்கையே மாற்றக்கூடியவர்கள். பந்துவீச்சில் வேகப்பந்து வீச்சாளர்கள் மட்டுமின்றி, சிறந்த மிதவேகப்பந்து வீச்சாளர்களும் அந்த அணியில் உள்ளனர். அவர்ளுக்கு எதிராக சிறப்பாக பேட் செய்வது முக்கியம் என்றார்.


அம்பயரின் தவறான முடிவால் வெற்றி கைவிட்டு போனது: அயர்லாந்து கப்டன்
வெஸ்ட் இண்டீஸ், அயர்லாந்து இடையே நடந்த போட்டியில் அயர்லாந்து வீரர் வில்சன் வெஸ்ட் இண்டீஸ் வீரர் சேமி பந்தில் எல்.பி.டபிள்யூ ஆகி ஆட்டம் இழந்தார்.
அவருக்கு எல்.பி.டபிள்யூ கொடுத்தது தவறு என்று அயர்லாந்து கப்டன் போட்டர் பீல்டு கூறி இருக்கிறார்.
அவர் கூறியதாவது: வில்சன் எல்.பி.டபிள்யூ ஆகவில்லை. ஆனால் அம்பயர் அசோக் டிசில்வா தவறாக அவுட் கொடுத்து விட்டார். பந்தை "ரீபிளே" செய்து பார்த்த போது பந்து வெளியே செல்வது தெளிவாக தெரிந்தது.
ஆனாலும் அவருக்கு அவுட் கொடுத்தது ஏன்? எப்படி என்பது புரிந்து கொள்ள முடியவில்லை. வில்சன் அவுட்டால் எங்களுக்கு பின்னடைவு ஏற்பட்டு விட்டது. இல்லை என்றால் வெற்றி பெற்றிருக்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

எனக்கு எதிராக எழும் விமர்சனங்களை கண்டு கொள்வதில்லை : டோனி

என்னைப் பற்றியும், எனது முடிவுகளைப் பற்றியும் கூறப்படும் விமர்சனங்களையும், குறைகளையும் நான் கண்டுகொள்வதில்லை என்று கேப்டன் தோனி கூறியுள்ளார்.
உலகக் கோப்பை கிரிக்கெட் அணியில் சுழற்பந்து வீச்சாளர் பியூஷ் சாவ்லாவை தோனி களம் இறக்கி வருவதும், அதற்கு எதிராக எழுந்துள்ள விமர்சனங்கள் குறித்தும் கருத்துத் தெரிவித்த தோனி இவ்வாறு கூறினார்.
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்துக்கு முன்னதாக நாகபுரியில் செய்தியாளர்களை வெள்ளிக்கிழமை சந்தித்த அவர் இது குறித்து மேலும் கூறியதாவது:
இந்திய அணியில் யார் எல்லாம் களம் இறங்குவார்கள் என்பதை இப்போதே கூறிவிட முடியாது. சூழ்நிலைக்கு ஏற்ப எவரெல்லாம் களம் இறங்குவார்கள் என்பது போட்டி தொடங்கும் முன் முடிவு செய்யப்படும்.
யுவராஜ் சிங் சிறப்பாகப் பந்து வீசி வந்தாலும் அவரை முழுவதுமாக பந்து வீச்சாளராகப் பயன்படுத்த முடியாது. அது அவருக்கு நெருக்கடியை அதிகரிக்கும். தேர்வு செய்யும் அணியை வைத்து எந்த அளவுக்கு சிறப்பாக விளையாட முடியுமோ அவ்வளவு சிறப்பாக ஆடுவோம் என்றார் தோனி.
லெக் ஸ்பின்னர் சாவ்லாவுக்கு பதிலாக ஆஃப் ஸ்பின்னர் அஸ்வினை களம் இறக்க வேண்டுமென்று இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் கூறியுள்ளது குறித்து தோனியிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு, அடுத்தவர்கள் என்ன கூறுகிறார்கள் என்பது குறித்து நான் அதிகம் கவலைப்படுவது இல்லை. சாவ்லா விளையாடுவது சிறந்தது என்ற காரணத்தினாலேயே அவரைத் தொடர்ந்து களம் இறங்க வைத்து வருகிறேன்.
ஏற்கெனவே இந்திய அணி காலிறுதிக்கு தகுதி பெற்றுவிட்டது. இந்நிலையில் தென் ஆப்பிரிக்கா, மேற்கிந்தியத் தீவுகள் ஆகிய வலுவான அணிகளுக்கு எதிராக கடைசி இரு லீக் ஆட்டங்களும் அமைந்துள்ளன. இதில் பெறும் வெற்றி அணிக்கு மேலும் நம்பிக்கை அளிப்பதாக இருக்கும் என்றார் தோனி.


கால் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது இலங்கை அணி
உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் கால் இறுதிப்போட்டிக்கு இலங்கை அணி தெரிவாகியுள்ளது. குழு 'ஏ' இல் இடம்பெற்றுள்ள இலங்கை அணி 5 போட்டிகளில் பங்குபற்றி 7 புள்ளிகளைப் பெற்று தற்போது இக்குழுவில் முன்னிலை வகிக்கிறது.
இலங்கை அணி இதுவரை 3 போட்டிகளில் வெற்றி பெற்றது. பாகிஸ்தானிடம் மாத்திரம் தோல்வியடைந்தது. அவுஸ்திரேலியாவுடனான போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மறுபுறம் குழு 'பி' இல் இந்திய அணி 4 போட்டிகளில் மாத்திரம் பங்குபற்றி 7 புள்ளிகளைப் பெற்று முன்னிலை வகிக்கின்றது.



வரலாறாக மாறப் போகும் சச்சினின் அவுட்
அயர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் சச்சின், சுழற்பந்து வீச்சாளர் கிரான்ட் டக்ரெல் பந்தில் அவுட் ஆனார்.
அதை அவர் இன்று வரை பெருமையாக பேசி வருகிறார். என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையின் பொன்னான தருணம் இது.
நான் சச்சினின் தீவிர ரசிகன். அவரது பேட் செய்யும் அழகு எனக்கு மிகவும் பிடிக்கும். நான் வயதான பின்னும் அவரது விக்கெட்டை வீழ்த்தியதை மறக்க மாட்டேன்.
அதை என்னுடைய பேரக் குழந்தைகளுக்கு விவரிப்பேன். எப்படி அவுட் செய்தேன். அந்த சமயத்தில் எனது மனநிலை எப்படி இருந்தது என்றெல்லாம் கதை கதையாய் கூறி மகிழ்ச்சி அடைவேன் என்று தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் அணி காலிறுதிக்கு தகுதி

ஸிம்பாப்வே அணியுடனான உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி 7 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியுள்ளது. இதன் மூலம் பாகிஸ்தான் அணி காலிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
பள்ளேகல அரங்கில் நேற்று நடைபெற்ற இப்போட்டியில் பல தடவை மழை குறுக்கீடு செய்தது.
முதலில் துடுப்பெடுத்தாடிய ஸிம்பாப்வே அணி 39.4 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 151 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் ஆட்டம் நிறுத்தப்பட்டது. கிறேக் ஏர்வின் 52 ஓட்டங்களைப் பெற்றார். உமர் குல் 36 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
மீண்டும் ஆட்டம் ஆரம்பமான போது பாகிஸ்தான் அணி வெற்றி பெறுவதற்கு டக்வோர்த் லூயிஸ்முறையில் 38 ஓவர்களில் 162 ஓட்டங்கள் எனும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
பாகிஸ்தான் அணி 34.1 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 164 ஓட்டங்களைப் பெற்றது.
ஆஷாட் ஷபீக் ஆட்டமிழக்காமல் 78 ஓட்டங்களையும் மொஹமட் ஹாபிஸ் 49 ஓட்டங்களையும் பெற்றனர். உமர்குல் இப்போட்டியின் சிறப்பாட்டக் காரராகத் தெரிவானார்.
குழு 'ஏ' இலிருந்து இலங்கை, நியூஸிலாந்து, அவுஸ்திரேலியா, பாகிஸ்தான் ஆகிய அணிகள் காலிறுதிக்குத் தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அவுஸ்திரேலிய பந்து வீச்சு பலம் இழந்து விட்டதா?
அவுஸ்திரேலிய பந்து வீச்சு பலம் இழந்து விட்டது என்று கூறப்படுவதற்கு அந்த அணியின் கேப்டன் ரிக்கி பாண்டிங் மறுப்புத் தெரிவித்துள்ளார்.
பெங்களூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் அவுஸ்திரேலியா கென்யாவை 60 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இந்த ஆட்டத்தில் கென்ய அணியின் பேட்டிங் சிறப்பாக இருந்தது. 50 ஓவர்கள் முழுமையாக ஆடிய அவர்கள், 6 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 264 ரன்கள் எடுத்தனர். இதில் 3 விக்கெட்டுகள் ரன் அவுட்தான். கென்ய வீரர்கள் மொத்தம் 7 சிக்ஸர்களையும், 24 பவுண்டரிகளையும் விளாசினர். விக்கெட்டை எடுக்கவும் அவுஸ்திரேலிய பந்து வீச்சாளர்கள் திணறினர்.
இதனால் அவுஸ்திரேலியாவின் பந்து வீச்சு பலமாக இல்லை என்ற கருத்து எழுந்தது. இந்நிலையில்
இது குறித்து பாண்டிங் கூறியது:
எங்கள் வீரர்களின் பந்து வீச்சு சிறப்பாகவே இருந்தது. கென்ய வீரர்கள் திறமையாக ஆடியதால் அவர்களால் அதிக ரன்களை எடுக்க முடிந்தது. இதற்காக எங்கள் பந்து வீச்சு பலம் இல்லை என்று கூற முடியாது.

காலி இருக்கைகளுடன் ஈடன் கார்டன் போட்டிகள்
நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ரசிகர்களைக் கொண்ட மைதானமாகக் கருதப்படும் ஈடன் கார்டன்ஸில் 15ஆம்..
..தேதி நடைபெறும் தென் ஆப்பிரிக்கா, அயர்லாந்து ஆட்டத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எந்த வித உற்சாகமும் இல்லை. டிக்கெட்டுகளை வாங்க ஆளில்லை.
இதுவரை 2,400 டிக்கெட்டுகளே விற்கப்பட்டுள்ளன. 90,000 ரசிகர்கள் அமர்ந்து பார்க்கும் ஸ்டேடியத்தில் 2,400 பேர்தான் பார்ப்பார்கள் என்றால் அது காலியான ஸ்டேடியம் என்பதில் ஐயமில்லை.
இந்யா, இங்கிலாந்து போட்டி அங்கு ரத்து செய்யப்பட்டதிலிருந்தே ரசிகர்கள் அங்கு நடக்கவிருக்கும் போட்டிகளுக்கு ஆர்வம் எதையும் காட்ட விரும்பவில்லை என்று தெரிகிறது.
அயர்லாந்து, நெதர்லாந்து போட்டியும் ஜிம்பாப்வே கென்யா போட்டியும் அங்கு நடைபெறுகிறது. இது போன்ற முக்கியத்துவமற்ற போட்டிகளை கொல்கட்டாவிற்கு வழங்கி ஐ.சி.சி.யில் உள்ள ஷரத் பவார் கொல்கட்டா ரசிகர்களுக்கு துரோகம் செய்துள்ளதாக டால்மியா ஏற்கனவே குற்றம்சாட்டியிருந்தார்.
1987ஆம் ஆண்டு ஆலன் பார்டர் முதன் முதலாக ஆஸ்ட்ரேலியாவுக்காக உலகக் கோப்பையை வென்ற மைதானமாகும் இது. 1996ஆம் ஆண்டு ஒருலட்சம் ரசிகர்கள் முன்னிலையில் இந்தியா தோல்வி தழுவும் என்ற நிலையில் ரசிகர்கள் தகராறில் ஈடுபட்டு ஆட்டம் இலங்கையின் சார்பாக முடிவு செய்யப்பட்டது.
தென் ஆப்பிரிக்காவும், அயர்லாந்தும் ஈடன்கார்டன்ஸில் விளையாட ஆர்வமாக உள்ள நிலையில் அந்த மைதானத்தின் சிறப்பம்சமான அதன் சப்தமிடும் ரசிகர்கள் இல்லாமல் விளையாடுவது வரலாற்றுச் சிறப்பு மிக்க அந்த மைதானத்திற்கு ஐ.சி.சி. இழைத்த இழுக்காகும்.
இந்தியா விளையாடும் போட்டியை ரத்து செய்ததால் ரசிகர்களின் கோபத்திற்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆளாகியுள்ளனர். அதனை அவர்கள் இவ்வாறுதானே வெளிப்படுத்த முடியும். எனவேதான் டிக்கெட்டுகள் விற்பனையில் மந்தம் ஏற்பட்டுள்ளது.


பாகிஸ்தான்-ஜிம்பாப்வே போட்டி மழையால் பாதிப்பு
இலங்கையில் உள்ள கண்டியில் பல்லகெலே மைதானத்தில் பாகிஸ்தான், ஜிம்பாவே அணிகள் மோதுகின்றது.
இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாவே அணி 27.2 ஓவர்களில் 96/5 விக்கெட் இருந்த போது மழை குறுக்கிட்டது.
இதனால் போட்டி நிறுத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து மழை நின்றவுடன் மீண்டும் போட்டி தொடங்கியது. ஆட்டம் நேரம் போததால் 50 ஓவலிருந்து 43 ஒவராக குறைக்கப்பட்டது.
இதில் பவர்பிளே மற்றும் டக்வோத் லெவிஸ் முறையும் கொண்டு மீண்டும் ஜிம்பாவே ஆடத் தொடங்கியது. 39.4 ஓவரில் 151/7 விக்கெட் இருந்த நிலையில் மீண்டும் மழை குறுக்கிட்டது.

உலக கிண்ண போட்டியில் காலிறுதிக்கு தெரிவாகியுள்ள அணிகளும் குழப்பங்களும்

உலகக் கிண்ணக் கிரிக்கெட்டில் காலிறுதியில் நுழையப்போகும் அணிகள் குறித்து பெரும் ஆர்வமேற்பட்டுள்ளது.
உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டியில் ஞாயிற்றுக்கிழமை வரை 31 லீக் போட்டிகள் முடிந்து விட்டன. "ஏ' பிரிவிலிருந்து காலிறுதிக்கு முன்னேறும் 4 அணிகள் ஏறக்குறையை இறுதி செய்யப்பட்டு விட்டன. புள்ளிப் பட்டியலில் முதல் 3 இடங்கள் வகிக்கும் இலங்கை, நியூஸிலாந்து, அவுஸ்திரேலிய அணிகள் காலிறுதிச் சுற்றை எட்டிவிட்டன. இப்பிரிவில் 4 ஆவது அணியாக பாகிஸ்தான் காலிறுதிக்குத் தகுதி பெறுமென்று எதிர்பார்க்கப்படுகிறது. அநேகமாக இன்ற பாகிஸ்தான் காலிறுதியை உறுதி செய்துவிடக் கூடிய சாத்தியம் உள்ளது. சிம்பாப்வே, கனடா, கென்யா அணிகள் இப்பிரிவில் வெளியேறுகின்றன.
ஆனால், "பி' பிரிவில் தான் இடியப்ப சிக்கல் நீடிக்கிறது. இந்தியா 5 போட்டியில் பங்கேற்று 3 வெற்றி, ஒரு தோல்வி, ஒரு டையுடன் 7 புள்ளிகளுடன் தனது பிரிவில் முதலிடம் வகிக்கிறது. இன்னும் ஒரு போட்டியில் இந்தியா ஆட வேண்டி (மேற்கிந்தியாவுக்கு எதிராக) உள்ள நிலையில் காலிறுதியில் விளையாடுவது ஓரளவு உறுதி செய்யப்பட்டு விட்டது.
மற்ற 3 இடங்களுக்குத்தான் கடும் போட்டி நிலவுகிறது. தென்னாபிரிக்கா அடுத்த சுற்றுக்கு முன்னேற வேண்டுமென்றால் எஞ்சிய 2 லீக்கில் (பங்களாதேஷ் மற்றும் அயர்லாந்து) ஒன்றில் வெற்றிபெற வேண்டும். அவை இரண்டும் சிறிய அணிகள் என்பதால் தென்னாபிரிக்காவின் காலிறுதி வாய்ப்பில் பிரச்சினை இருக்காது.
5 புள்ளிகளுடன் உள்ள இங்கிலாந்து அணி காலிறுதிக்கு முன்னேற வேண்டுமென்றால் கடைசி லீக்கில் மேற்கிந்தியாவை கட்டாயம் வீழ்த்தியாக வேண்டும். அதில் தோற்றால் இந்த முறையும் இங்கிலாந்தின் கனவு பாழ்பட்டுப் போகும்.
முன்னாள் சாம்பியனான மேற்கிந்திய அணி 4 போட்டிகளில் விளையாடி 6 புள்ளிகளுடன் (3) வெற்றி உள்ளது. அந்த அணி தனது கடைசி இரு லீக்கில் (இங்கிலாந்து மற்றும் இந்தியா எதிராக) ஒன்றில் வெற்றி பெற்றாக வேண்டும். இரண்டிலும் தோற்றால் கூட ஒரு சில அணிகளின் முடிவு சாதகமாக அமைந்து ஓட்டவீதத்திலும் சிறப்பாக இருந்தால் இந்த வழியிலும் மேற்கிந்தியாவுக்கு காலிறுதி வாய்ப்புக் கிடைக்கலாம்.
அதிர்ச்சியளிக்கக்கூடிய அணியான பங்களாதேஷ் அணி கடைசி 2 போட்டிகளிலும் (நெதர்லாந்து மற்றும் தென்னாபிரிக்கா எதிராக) வென்றால் காலிறுதியைப் பற்றி நினைத்துப் பார்க்க முடியும். நெதர்லாந்தை வென்று தென்னாபிரிக்காவிடம் தோற்றால் பங்களாதேஷின் புள்ளி எண்ணிக்கை 6 ஆக இருக்கும். அப்போது இங்கிலாந்து அணி தோல்வி கண்டால் பங்களாதேஷûக்கு வாய்ப்புக் கிட்டும்.
அயர்லாந்து அணிக்கும் காலிறுதி வாய்ப்பு முழுமையாக முடிந்துவிடவில்லை. எஞ்சிய இரு லீக்கில் (நெதர்லாந்து மற்றும் தென்னாபிரிக்கா எதிராக) வெற்றிபெற்றால் ஒரு சில அணிகளின் முடிவையும் ஓட்ட வீதத்தையும் பொறுத்துச் சிறிய வாய்ப்பிருக்கிறது. இந்தப் பிரிவில் நெதர்லாந்து மட்டுமே தற்போது வெளியேற்றப்பட்டிருக்கிறது. எனவே, "பி' பிரிவில் காலிறுதிக்குத் தகுதிபெறும் அணிகள் எவை? எவை? என்பதை அறிய இன்னும் சில நாட்கள் காத்திருக்க வேண்டும்.

பாகிஸ்தான் அணிக்கு புதிய நெருக்கடி

பாகிஸ்தான் அணியில் விக்கெட் காப்பாளராக யாரை நியமிப்பதென்பதில் பெரும் சிக்கலேற்பட்டுள்ளது.
மோசமான களத்தடுப்புக் காரணமாக பாகிஸ்தான் விக்கெட் காப்பாளர் கம்ரன் அக்மலை அடுத்த ஆட்டத்தில் நீக்கிவிட்டு அவருக்குப் பதிலாக அவரது தம்பி உமர் அக்மலை விக்கெட் காப்பாளராக பயன்படுத்த பாகிஸ்தான் அணி நிர்வாகம் ஆலோசனை நடத்தி வருகிறது.
இந்த நிலையில் உமர் அக்மல் தனது வலது கைவிரலில் காயமேற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். தனது அண்ணனைக்காப்பாற்ற உமர் அக்மல் போலியாக காயத்தை காட்டி நடிப்பதாக பாகிஸ்தான் பத்திரிகைகள் விமர்சித்துள்ளன.
ஆனால் இதனை பாகிஸ்தான் அணி நிர்வாகம் மறுத்துள்ளது. எனினும் கம்ரன் அக்மலை நீக்கவேண்டுமென்ற கோஷம் அதிகரித்து வந்தாலும் பயிற்சியாளர் வக்கார் யூனுஸ் அவருக்கு ஆதரவாக உள்ளார்.

இந்தியாவை வென்றது மகிழ்ச்சி : ஸ்மித்

பேட்டிங்கில் 40 ஓவர்கள் வரை எங்களைத் திணற வைத்த இந்திய அணியை வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது என்று தென் ஆப்பிரிக்க கேப்டன் ஸ்மித் கூறியுள்ளார்.
இந்திய அணியை வெல்வது எப்போதும் கடினமான விஷயம். அதுவும் அவர்களின் சொந்த மண்ணில் வென்றதை மிகப்பெரிய விஷயமாகவே கருதுகிறேன்.
கடைசி கட்டத்தில் குறைந்த ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் வீழ்த்தியது திருப்புமுனையாக அமைந்தது. முதலில் சச்சின், சேவாக், கம்பீர் ஆகியோரது ஆட்டம் திகைப்பை ஏற்படுத்தியது என்றார்.

கோப்பையை வெல்லும் டோனியின் கனவு பலிக்காது

இந்த முறை உலக கிண்ணப் போட்டியில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்ற வேண்டும் என்ற டோனியின் எண்ணம் பலிக்காது என அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் டீன்ஜோன்ஸ் தெரிவித்துள்ளார்.
அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது: ஒரு அணி உலக கோப்பையை வெல்ல வேண்டுமென்றால் அந்த அணியில் உள்ள 4 பேட்ஸ்மேன்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். புது பந்திலும், பவர்பிளேயிலும் அதிக ரன்களை விளாச வேண்டும்.
மேலும் திறமை வாய்ந்த 4 பந்து வீச்சாளர்கள் இருக்க வேண்டும். பவர்பிளேயிலும், நெருக்கடியான நேரங்களிலும் அவர்கள் அசத்த வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக பீல்டிங்கில் ஜொலிக்க வேண்டும்.
தற்போதுள்ள நிலையில் இந்திய அணி கோப்பையை வெல்லும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. இப்படியே ஆடினால் கோப்பையை வெல்ல வேண்டுமென்பது டோனி உள்ளிட்ட இந்திய வீரர்களின் கனவாகவே இருக்கும்.
சேவாக், சச்சின் ஜோடி எல்லாவிதமான பந்து வீச்சுகளையும் சிதறடித்து ரன் குவிக்கும் திறமையுடன் உள்ளது. ஆனால் இதுமட்டுமே வெற்றிக்கு போதாது. ஜாகீர்கான், நெக்ரா, சாவ்லா, ஹர்பஜன்சிங் ஆகியோரை கொண்ட பவுலிங் கூட்டணி தரம் வாய்ந்ததாக இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.


இந்திய அணியிலிருந்து யூசுப்பதான் மற்றும் நெக்ரா நீக்கம்

உலக கிண்ணக் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி கடைசி லீக் ஆட்டத்தில் வெஸ்ட்இண்டீசை வருகிற 20 ந் திகதி எதிர் கொள்கிறது.
இந்த ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கிறது. இந்தப் போட்டிக்கான இந்திய அணியில் சில மாற்றம் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
ஒரு பேட்ஸ்மேன், ஒரு பவுலர் மாற்றப்படலாம். சென்னை போட்டியில் இந்தியா 2 வேகப்பந்து வீரர், 2 சுழற்பந்து வீரருடன் களம் இறக்கப்படலாம்.
இதனால் முனாப்பட்டேல் அல்லது நெக்ரா ஆகியோரில் ஒருவர் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக உள்ளூர் வீரரான அஸ்வின் இடம் பெறலாம். நெக்ராவே நீக்கப்பட வாய்ப்பு உள்ளது.
பேட்ஸ்மேன்களில் யூசுப்பதான், வீராட்கோலி கடந்த 2 ஆட்டங்களில் சரியாக ஆடவில்லை. இதனால் இந்த இருவரில் ஒருவர் நீக்கப்படலாம். அது யார் என்பது உறுதியாக தெரியவில்லை.
யூசுப்பதான் நீக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அவருக்கு பதிலாக ரெய்னா இடம் பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


2012 ம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டி அரங்கம் திறப்பு

2012 ம் ஆண்டிற்கான ஒலிம்பிக் போட்டி லண்டனில் நடைபெறுகிறது. நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் உலக விளையாட்டு விழாவை பிரம்மாண்டமாக நடத்த ஒலிம்பிக் பூங்காவில் 5 அரங்குகள் தயாராகின்றன.
இதில் ஒரு அரங்கமாக சைக்கிள் போட்டிக்கான வேலோட்ரோடு அரங்கு தயார் ஆகியுள்ளது. செவ்வாயன்று திறப்பு காணும் இந்த அரங்கம் ஆயிரம் பார்வையாளர்கள் இருக்கையை கொண்டது. இங்கு ஒலிம்பிக் போட்டிகளும், உடல் ஊனமுற்றோருக்கான பாராலிம்பிக் சைக்கிளிங் போட்டிகளும் இடம் பெறுகின்றன.
கடந்த 2008 ம் ஆண்டு பெய்ஜிங் ஒலிம்பிக்கில் சைக்கிளிங்கில் 3 தங்கபதக்கம் பெற்ற சர்கிறிஸ் ஹோய் இந்த அரங்கம் அமைப்பதற்கான வடிவமைப்பில் பணியாற்றியுள்ளார். இந்த சைக்கிள் அரங்கானது உலகின் தலைசிறந்த விளையாட்டு அரங்குகளில் ஒன்றாக இருக்கும்.
இதை கட்டிடக்கலை நிபுணர்கள் மற்றும் கிராண்ட் அசோசியேஷன் நிபுணர் குழுவினர் அமைத்துள்ளனர். 2007 ம் ஆண்டு வடிவமைப்பு போட்டியில் இந்த நிபுணர்கள் தேர்வு செய்யப்பட்டார்கள்.

கோபத்தில் டிவியை உடைத்து நொறுக்கிய பாண்டிங் : பின்பு மன்னிப்பு கேட்டார்

ரன் அவுட் மூலம் தான் அவுட் ஆனதை பொறுத்துக் கொள்ள முடியாத அவுஸ்திரேலிய அணி கெப்டன் ரிக்கி பாண்டிங் தனது ரூமில் இருந்த டிவியை உடைத்து தனது வெறியை தீர்த்துக் கொண்டார்.
இந்நிகழ்வு சர்வதேச கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உலக கிண்ண போட்டிகள் கடந்த 19 ம் தேதி துவங்கி தற்போது நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இந்தியாவில் உள்ள அகமதாபாத்தில் நடைபெற்ற ஜிம்பாப்வேவிற்கு எதிரான போட்டியில் அவுஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பொண்டிங் ரன் அவுட் முறையில் அவுட் ஆனார். அவுட் ஆனதும், பெவிலியன் திரும்பிய பாண்டிங் டிரஸ்சிங் ரூமில் இருந்த டிவியை உடைத்து நொறுக்கினார்.
மன்னிப்பு கேட்ட பொன்டிங்
பொன்டிங்கின் அநாகரியமான செயலுக்கு முன்னாள் வீரர்கள் உட்பட பலர்  பொண்டிங் மீது பலரும் விமர்சனம் தொடுத்தனர்.
ஆனால் உடனடியாக பொண்டிங் மன்னிப்புக் கேட்டதாகவும் தொலைக்காட்சியை மாற்றுமாறு கோரிக்கை விடுத்ததாகவும் குஜராத் கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது.

ஒரு சிக்ஸருக்கு 554 டொலர்
உலக கிண்ணப் போட்டிகளில் சிக்சர்கள் பறக்கும் போது, ரசிகர்கள் மட்டுமல்ல வசதியற்ற குழந்தைகளும் மகிழ்ச்சி அடையலாம்.
இம்முறை ஒவ்வொரு சிக்சருக்கும் 554 டொலர் வழங்கப்படுகிறது. இதன் மூலம் கிடைக்கும் கோடிக்கணக்கான நிதி ஏழை குழந்தைகளின் கல்விக்காக அளிக்கப்பட உள்ளது. இந்திய துணைக் கண்டத்தில் பத்தாவது உலக கிண்ண கிரிக்கெட் தொடர் நடக்கிறது.
இதில் வீரர்கள் சிக்சர்கள் அடிக்கும் போதெல்லாம், ரசிகர்களின் கைதட்டல் விண்ணை முட்டும். இம்மகிழ்ச்சியை நல்ல காரியத்துக்கு பயன்படுத்த சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ஐ.சி.சி.,) முடிவு செய்தது. இதற்கு "ரிலையன்ஸ் லைப் இன்சூரன்ஸ்" நிறுவனம் கைகொடுத்தது.
இதன்படி ஒவ்வொரு சிக்சருக்கும் தலா 554 டொலர் பணத்தை ரிலையன்ஸ் நிறுவனமும் வழங்கும். இத்தொடரில் நூற்றுக்கணக்கான சிக்சர்கள் அடிக்கப்பட வாய்ப்பு உள்ளது. இதன் மூலம் கோடிக்கணக்கில் நிதி கிடைக்கும்.
இது வசதியற்ற குழந்தைகளின் கல்விப் பணிக்காக பயன்படுத்தப்படும். இவர்கள் படிப்பதற்கு நூலகம், வசதியான அறை, ஆங்கிலம் கற்க தேவையான புத்தகங்கள் வழங்க ஏற்பாடு செய்யப்படும். இத்திட்டத்தின் கீழ் இந்தியாவில் வசதியற்ற 300 குழந்தைகள் பயன்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
வங்கதேசத்துக்கு எதிரான முதல் போட்டியில் சேவக் 5, கோஹ்லி 2  சிக்சர்கள் அடித்தனர். வங்கதேச வீரர்களான தமிம் இக்பால், சித்திக், ரகிபுல் ஹசன் தலா ஒரு சிக்சர் அடிக்க, மொத்தம் 10 சிக்சர் அடிக்கப்பட்டன. இதன் மூலம் துவக்க போட்டியில் மட்டும் 2.5 லட்சம் ரூபாய் நிதி கிடைத்துள்ளது.
ஐ.சி.சி.,யின் இந்த சிக்சர் திட்டத்துக்கு இந்தியாவின் சச்சின், தோனி, பாண்டிங், டேல் ஸ்டைன், வாட்சன் போன்ற முன்னணி வீரர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.


உலக கிண்ண தொடரில் அதிக போட்டியில் பங்கேற்று பொன்டிங் சாதனை
உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் அதிக போட்டியில் பங்கேற்ற வீரர் என்ற சாதனையை அவுஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பொண்டிங் பெற்றுள்ளார்.
ஜிம்பாப்வேயுடனான ஆட்டம் அவருக்கு உலகக் கோப்பையில் 40-வது ஆட்டமாகும். இதற்கு முன் அவுஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மெக்ராத் அதிகபட்சமாக 39 உலகக் கோப்பை ஆட்டங்களில் பங்கேற்று இருந்தார். அவரது சாதனையை பொண்டிங் முறியடித்துள்ளார்.
இவர்களுக்கு அடுத்த படியாக இலங்கையின் சனத் ஜெயசூர்யா, பாகிஸ்தானின் வாசிம் அக்ரம் ஆகியோர் அதிகபட்சமாக 38 உலகக் கோப்பை ஆட்டங்களில் களம் கண்டுள்ளனர்.
நட்சத்திர வீரர் சச்சின், வங்கதேசத்துடனான முதல் ஆட்டத்தில் விளையாடியதன் மூலம் உலகக் கோப்பையில் 37 ஆட்டங்களை நிறைவு செய்துள்ளார்.
உலகக் கோப்பையில் பொண்டிங் அதிக ஆட்டங்களில் பங்கேற்றுள்ள போதிலும், அதிக ரன்கள் எடுத்த வீரர்களில் சச்சின்தான் முதல் இடத்தில் உள்ளார்.
அவர் 37 ஆட்டங்களில் 1824 ரன்கள் எடுத்துள்ளார். சராசரி 57, அதிகபட்ச ரன் 152. பாண்டிங் 40 ஆட்டங்களில் 1565 ரன்கள் எடுத்துள்ளார். சராசரி 47.42. அதிகபட்ச ரன் 140 (ஆட்டமிழக்காமல்)


 இலங்கை வீரர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்: ஜெயவர்தனா
கனடா அணியை எளிதாக வீழ்த்தினாலும் உண்மையான சவால் பாகிஸ்தானுக்கு எதிராகத்தான் துவங்குகிறது. இதனால் வீரர்கள் கவனமாக இருக்க வேண்டும் என இலங்கை வீரர் ஜெயவர்தனா எச்சரித்துள்ளார்.
உலக கிண்ணக் கிரிக்கெட் தொடரின் முதல் லீக் போட்டியில் இலங்கை அணி அனுபவமற்ற கனடாவை 210 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதில் பேட்டிங்கில் ஜெயவர்தனா சதம் அடித்து அசத்தினார்.
இதுகுறித்து ஜெயவர்தனா கூறியது: உலக கிண்ண தொடரின் முதல் போட்டியை நமது சொந்த மண்ணில் ரசிகர்களுக்கு முன்பாக துவக்கியது மகிழ்ச்சி தான். இதனால் கனடா அணிக்கு எதிரான போட்டியில் முதலில் சற்று நெருக்கடி இருந்தது. ஏனெனில் தொடரின் முதல் போட்டி என்பதால் வெற்றி பெற வேண்டிய கட்டாயம் இருந்தது. இதனால் கனடா அணியை எளிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
இதில் வெற்றி பெற்ற போதும் அடுத்து வரும் மற்ற அணிகளுக்கு எதிரான போட்டியில் கடுமையாக போராட வேண்டியது இருக்கும். வரும் பெப்ரவரி 26 ல் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டி மிகவும் முக்கியம். ஏனெனில் அந்த அணியில் தனிப்பட்ட முறையில் சிறப்பாக விளையாடக்கூடிய வீரர்கள் பலர் உள்ளனர். அவர்கள் எவ்வளவு அபாயகரமானவர்கள் என்று தெரியும். எனவே அவர்களை எதிர்கொள்ள சரியான திட்டமிடல், நல்ல மனநிலை வேண்டும்.
இந்த போட்டிக்காக நமக்கு சாதகமான ஆடுகளம் தேவை. அதேநேரம் அதிக திருப்பம் ஏற்படக்கூடாது. சென்னை, பெங்களூரு ஆடுகளத்தில் அதிக திருப்பம் ஏற்படுகிறது. இது போன்ற ஆடுகளங்கள் முதலில் பேட்டிங் செய்பவர்களுக்கு சாதகமாக இருக்கும். இவ்வாறு ஜெயவர்தனா கூறினார். 


உலகக் கிண்ணப் போட்டியில் விளையாடும் இந்திய வீரர் ஒருவருக்கு 2.3 கோடிக்கு இன்சுரன்ஸ்!

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாடும் வீரர்களை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் இன்சூரன்ஸ் செய்துள்ளது.
ஒவ்வொரு வீரரும் தனிநபர் விபத்து காப்பீட்டு திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர். அதன்படி ஒவ்வொரு வீரருக்கு ரூ.2.3 கோடிக்கு இன்சூரன்ஸ் செய்யப்பட்டுள்ளனர்.
ஒரியன்டல் இன்சூரன்ஸ் கம்பெனியுடன் இந்த காப்பீடு செய்யப்பட்டுள்ளது. இதேபோல இந்தியா விளையாடும் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டால் நிதி இழப்பு ஏற்படும்.
இதற்காக ரூ.130 கோடிக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் மற்றொரு காப்பீடு செய்துள்ளது.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் வழிகாட்டுதல் நெறிமுறைப்படி இந்த காப்பீடு செய்யப்பட்டுள்ளது என கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
கிரிக்கெட் வாரியம் 1993-ம் ஆண்டு வீரர்களுக்கு இன்சூரன்ஸ் பாலிசியை முதன்முதலாக எடுத்தது. 1996-ம் ஆண்டு இந்தியாவில் நடந்த உலக கோப்பையில் ஒவ்வொரு வீரருக்கு ரூ.10 லட்சத்துக்கு இன்சூரன்ஸ் செய்யப்பட்டு இருந்தது.


அடுத்த உலக கிண்ணப் போட்டியில் சிறந்த 10 அணிகள் மட்டுமே பங்கேற்கும்: ஐசிசி

2015-ல் நடக்கும் உலக கிண்ணப் போட்டியில், போட்டியிடும் அணிகளின் எண்ணிக்கையை குறைக்க ஐசிசி முடிவு செய்துள்ளது.
உலக கிண்ணப் போட்டிகள் நீண்ட நாட்கள் நடப்பதற்கு காரணம் அதிக அணிகள் பங்கேற்பது தான். இது ரசிகர்களிடையே சலிப்பை ஏற்படுத்தும். எனவே சிறந்த 10 அணிகள் மட்டுமே விளையாடும் வகையில் அடுத்த 2015 உலக கோப்பை போட்டிகளை திட்டமிட வேண்டும்.
பழைய நடைமுறைகளை விடுத்து புதிய முறைகளை பின்பற்றி கிரிக்கெட்டை வளர்க்க வேண்டும் என ஐசிசி கவுன்சிலில் கோரிக்கை எழுந்துள்ளது. இதுகுறித்து ஐசிசி சார்பில் இணையதளத்தில் வாக்கெடுப்பு நடந்தது.
இதில் 2015 உலக கிண்ணப் போட்டியில் 16 அணிகள் பங்கேற்கலாம் என்பதற்கு ஆதரவாக 73 சதவிகிதம் பேர் வாக்களித்துள்ளனர். 10 அணிகள் கருத்துக்கு ஆதரவாக வெறும் 9 சதவிகித வாக்குகளே கிடைத்துள்ளன.
ஆனாலும் 10 அணிகள் பங்கேற்கும் உலக கோப்பையே சிறந்தது என ஐசிசி கருத்து தெரிவித்துள்ளது. இதற்காக அணிகளை தேர்வு செய்யும் தகுதி போட்டிகள் நடத்தவும் அது திட்டமிட்டுள்ளது.


சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறும் உதைபந்தாட்ட நட்சத்திரம் ரொனால்டோ

உலக கால்பந்து பிரபலங்களில் ஒருவரான ரொனால்டோ தான் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். பிரேசில் நாட்டைச் சேர்ந்த ரொனால்டோ நசாரியோ மூன்று முறை சர்வதேச கால்பந்து சம்மேளனமான ஃபிஃபாவின் சிறந்த வீரர் விருது பெற்றவர்.
உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளில் அதிகப்படியான கோல்களை அடித்தவர் என்கிற பெருமை ரொனால்டோவுக்கு உண்டு. அப்போட்டிகளில் அவர் 15 கோல்களை அடித்துள்ளார்.
உலகளவில் 18 ஆண்டுகள் கால்பந்து விளையாட்டில் தனக்கென்று ஒரு இடத்தை பெற்றிருந்த ரொனால்டோ பல உச்சங்களைத் தொட்டவர், அதே போல வீழ்ச்சிகளையும் கண்டவர்.
1996-97 ஆம் ஆண்டுகளில் அவர் பார்சிலோனா கால்பந்து அணிக்காக ஆடியபோது, கோல்போடும் ஒரு இயந்திரமாகவே காணப்பட்டார்.
தேவைப்படும் நேரத்தில் வேகமாக ஓடி, வேகத்தை குறைக்க வேண்டிய சமயத்தில் அதை சரியாக கையாண்டு, குறித்த தருணத்தில் பந்தை கோல் வலைக்குள் தள்ளுவதில் அவர் வல்லவர்.
பார்சிலோனாவிலிருந்து இண்டர் மிலான் அணிக்கு அவர் மாறிய போது, அவரது விளையாட்டில் ஒரு மென்மை போக்கு தெரிந்தது, அவரது நகர்வுகளில் புத்திசாலித்தனமும், தந்திரங்களும் நன்றாக வெளிப்பட்டன.
எனினும் அப்போது தான் அவரது முழங்காலில் பிரச்சினைகள் ஏற்பட ஆரம்பித்தன. தொடர்ந்து காயங்கள் ஏற்பட்டு, கிட்டத்தட்ட கால்பந்து விளையாட்டிலிருந்து ஓய்வு பெறும் நிலைக்கு அவர் தள்ளப்பட்டார்.
ஆனாலும், 2002 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை பிரேசில் வென்ற போது, அவரது கால்பந்து வாழ்க்கை ஒரு உணர்வுபூர்வமான உச்சத்தை எட்டியது.
ஆனால் அதன் பிறகு தனது உடல் தகுதியை தக்க வைத்துக் கொள்ள அவர் மிகவும் சிரமப்பட்டார்.
2011 ஆம் ஆண்டு அவரது கால்பந்து வாழ்க்கையில் ஒரு மகுடமாக இருந்திருக்க வேண்டியது. ஆனால் ரசிர்கர்கள் மற்றும் செய்தியாளர்களுடன் ஏற்பட்ட வன்முறை காரணமாக ஒரு கசப்புணர்வுடனேயே தான் ஓய்வு பெறுவதாக அறிவிக்கும் நிலைக்கு ரொனால்டோ ஆளாகியுள்ளார்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் பெரும் பரபரப்புகள் மற்றும் வெற்றிகளின் பின்னணியில் பிரேசிலின் கொரிந்தியாஸ் அணியில் அவர் சேர்ந்தார். அவரது நோக்கம் இந்த ஆண்டு தென் அமெரிக்காவின் பிரபலமான லிபரேடடொர்ஸ் கோப்பையை கொரிந்தியாஸ் அணிக்கு பெற்றுக் கொடுக்க வேண்டும் என்பதே.
சாவ் பாலோவில் இருக்கும் கொரிந்தியாஸ் அணிக்கு 25 மில்லியன் ரசிகர்கள்.
பல முக்கிய போட்டிகளை அந்த அணி வென்றிருந்தாலும் பிரபலமான இந்த லிபரேடடொர்ஸ் கோப்பை வென்றதில்லை.
ஆனால் இந்த ஆண்டின் முற்பகுதியில் சிறிதே அறியப்பட்டிருந்த கொலம்பிய நாட்டு அணியான டிபோர்டெஸ் டோலிமா அணியுடன் கொரிந்தியாஸ் தோல்வியடைந்தது.
மிகப் பெரிய எதிர்பார்ப்புடன் இருந்த ரசிர்கர்களுக்கு இது பெரும் ஏமாற்றமாக அமைந்தது. இந்தத் தோல்விக்கு ரொனால்டோவே காரணம் என பல ரசிகர்கள் கருதினர்.
இதையடுத்து, போட்டி இடம் பெற்ற மறுநாள், சாவ் பாலோவிலுள்ள கொரிந்தியாஸ் அணியின் பயிற்சி மைதானம் முழுவதும் அவரை அவமானப்படுத்தும் வகையில் வாசகங்களும் படங்களும் வரையப்பட்டிருந்தன.
அதற்கு மறுநாள் அவர் பயணித்த பஸ் மீது ரசிகர்கள் கல்லெறிந்த சம்பவம் இடம் பெற்றது. இதற்கு பிறகு அந்தத் தோல்விக்கு தனது பங்கை டிவிட்டரில் அவர் தெரியப்படுத்தினார்.


சச்சினுக்கு பரிசோதனை
காலில் காயம் ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் சச்சின் டெண்டுல்கருக்கு எம்.ஆர்.ஐ ஸ்கேன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதில் அவருக்கு எந்த பிரச்னையும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. எனவே அவர் இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் நிச்சயமாகக் களம் இறங்குவார். வங்கதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் வென்ற பின் சச்சின் மும்பை திரும்பியுள்ளார்.
இந்நிலையில் அவருக்கு கால் மூட்டில் லேசாக வலி இருந்து வந்ததாகத் தெரிகிறது. இதனால் காயம் ஏதும் ஏற்பட்டிருக்குமோ என்ற சந்தேகமும் ஏற்பட்டது. இதனையடுத்து மும்பை லீலாவதி மருத்துவமனையில் சச்சினுக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு எம்.ஆர்.ஐ ஸ்கேன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதில் அவருக்கு மூட்டில் காயம் ஏதும் ஏற்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து பெங்களூர் செல்லும் அவர், இங்கிலாந்துக்கு எதிராக வரும் 27-ம் தேதி நடைபெறும் ஆட்டத்துக்கான பயிற்சியில் கலந்து கொள்ள இருக்கிறார்.
முன்னதாக உலகக் கிண்ண போட்டிக்கு முன் நடைபெற்ற தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் காயம் காரணமாக சச்சின் வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.


கண்ணீருடன் விடைபெற்றார் ரொனால்டோ



பிரேஸிலிய உதைப்பந்தாட்ட நட்சத்திரம் ரொனால்டோ சர்வதேச போட்டிகளில் இருந்தான தனது ஓய்வை கண்ணீர் மல்க ஊடகங்களுக்கு அறிவித்தார்.
முப்பத்து ஐந்து வயதான ரொனால்டோ கடந்த சில வருடங்களாக உபாதைகளால் அவதிப்பட்டு வந்தார்.

கடந்த உலகக்கிண்ண போட்டிகளின் போதும் இவருக்கு அணியில் வாய்ப்பு வழங்கப்படவில்லை.

இந்நிலையில் அவரது ஓய்வு தொடர்பான செய்திகள் வெளிவந்த போதிலும் நேற்று சாஹோ பஹோலோவில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் தனது ஓய்வை உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.

இதன் போது கருத்து தெரிவித்த ரொனால்டோ உதைப்பந்தாட்டத்திற்காக தான் அனைத்தையும் தியாகம் செய்ததாகவும், விளையாடும் ஆர்வம் உள்ள போதிலும் தனது உடல் அதற்கு ஒத்துழைக்கவில்லை எனவும், இம்முடிவானது தனது முதல் மரணம் எனவும் குறிப்பிட்டார்.

உலகின் மிகச் சிறந்த உதைப்பந்தாட்ட வீரர்களில் ஒருவராக கருதப்படும் ரொனால்டோ உலகக் கிண்ண உதைப்பந்தாட்ட போட்டிகளில் 15 கோல்களை அடித்து அதிக கோல்களை அடித்தவராக திகழ்கின்றன்றார்.


முரளியின் சுயசரிதை'800'

கிரிக்கெட் சரித்திரத்தில் அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றி உலக சாதனை படைத்த முத்தையா முரளிதரன் சுயசரிதையை வெளியிட்டுள்ளார்.
டெஸ்ட் போட்டிகளில் '800' விக்கெட்டுகளைக் கைப்பற்றி புதிய உலகசாதனை படைத்ததன் நினைவாகத் தனது சுயசரிதைக்கு "800' என்று பெயரிட்டுள்ளார்.
கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்விலேயே அவர் தனது சுயசரிதையை வெளியிட்டுள்ளார். எனினும் இந்தப் புத்தகம் ஆகஸ்ட் மாதமே விற்பனைக்கு வருமெனத் தெரிவிக்கப்படுகிறது.
38 வயதான முரளிதரன் கடந்த வருடம் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார். எனினும் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் தற்போது விளையாடி வரும் இவர் இவ்வாரம் ஆரம்பமாகவுள்ள உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டி முடிந்ததும் ஒருநாள் போட்டிகளிலிருந்தும் ஓய்வுபெறத் திட்டமிட்டுள்ளார்.
"800' என்ற தனது சுயசரிதைப் புத்தகத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் தான் சந்தித்த சுவாரஸ்யமான சர்ச்சைக்குரிய மற்றும் வேதனையான விடயங்கள் குறித்து மனந்திறந்து பேசியுள்ளார்.
இவரது சுயசரிதைப் புத்தகத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.


இலங்கை கிரிக்கெட் மைதானம்: ஐசிசி புதிய உத்தரவு

பயிற்சி ஆட்டத்தின் போது ஏற்பட்ட குழப்பங்கள், உலகக் கோப்பை கிரிக்கெட் ஆட்டங்களின் போது ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென இலங்கை...
..பிரேமதாசா மைதான நிர்வாகிகளுக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) உத்தரவிட்டுள்ளது.
இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள இந்த மைதானத்தில் இலங்கை - மேற்கிந்தியத்தீவுகள் இடையிலான பயிற்சி ஆட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அப்போது ரசிகர்கள் உள்ளே வரும் நடைமுறையில் அதிக கெடுபிடிகள் இருந்ததால் சிக்கல் ஏற்பட்டது.
மைதானத்துக்கு சுமார் அரை கி.மீ. தூரத்துக்கு முன்னால் உள்ள இடத்தில் டிக்கெட்டுகள் வழங்கப்பட்டன.
இதுதவிர கிரிக்கெட் நிர்வாக அதிகாரிகள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்டோர் உள்ளே வருவதிலும் பாதுகாப்பு கெடுபிடிகள் அதிகம் இருந்தது.
ஐசிசி பத்திரிகை தொடர்பு அதிகாரி ஒருவருக்கு மைதானத்துக்கு வர முதலில் அனுமதி மறுப்பட்டது. இதுபோன்ற பல தேவையற்ற குழப்பங்கள் போட்டியின் போது ஏற்பட்டன.
போட்டி ஏற்பாடுகளிலும் பல குழப்பங்கள் இருந்ததாக உள்ளூர் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டிருந்தன.
இந்நிலையில் உலகக் கோப்பை போட்டிகள் நடைபெறும் போது இதுபோன்ற தேவையற்ற குழப்பங்கள் ஏற்படுவதைத் தவிர்க்கும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென மைதான நிர்வாகிகளுக்கு ஐசிசி புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது.
இந்த விஷயத்தில் இலங்கை கிரிக்கெட் ஏற்பாட்டாளர்கள் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். இனி வரும் ஆட்டங்களில் இதுபோன்ற பிரச்னைகள் ஏற்படாது என்பது உறுதி செய்யப்பட வேண்டுமென்றும் ஐசிசி கூறியுள்ளது.
இந்த உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்காக புதுப்பொலிவு பெற்றுள்ள கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் ஒரு காலிறுதி, ஓர் அரையிறுதி ஆட்டம் உள்பட மொத்தம் 7 ஆட்டங்கள் நடைபெறவுள்ளன.

உலக கிண்ணப் போட்டி: கோலாகல துவக்க விழா

பத்தாவது உலக கிண்ண கிரிக்கெட்டின் துவக்கவிழா இன்று தாகாவில் நடக்கிறது. இரண்டே கால் மணி நேரம் நடக்கும் கலை நிகழ்ச்சிகள், ரசிகர்களுக்கு சிறந்த விருந்தாக அமைய உள்ளது.
இந்தியா, இலங்கை, வங்கதேசம் இணைந்து பத்தாவது உலக கிண்ணத் தொடரை நடத்துகின்றன. போட்டிகள் வரும் 19ம் தேதி முதல் துவங்குகின்றன. இதன் துவக்கவிழா இன்று வங்கதேசத்தின் பங்கபந்து தேசிய விளையாட்டு மைதானத்தில் பிரம்மாண்டமாக நடக்கிறது.
வங்கதேசம் சுதந்திரம் அடைந்த பின் நடக்கும் மெகா விளையாட்டு தொடர் என்பதால், உலகத்தின் கவனத்தை தன்பக்கம் ஈர்க்க இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்த தீர்மானித்துள்ளது. 135 நிமிடங்கள் நடக்கும் துவக்கவிழா நிகழ்ச்சிகள் இன்று மாலை 5.30 மணிக்கு துவங்குகிறது. ஐந்து பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ள இந்த விழாவில் பிரபல பாடகர் பிரயான் ஆடம்ஸ், இந்திய பாடகர் சோனு நிகாம் போன்றவர்கள் பங்கேற்கின்றனர்.
அதற்கு முன்பாக மாலை 4 மணிக்கு எட்டு முன்னணி வங்கதேச பாடகர்கள் பங்கேற்கும் 50 நிமிட நிகழ்ச்சி நடக்கவுள்ளது. இதில் பிரபல இசைக் கலைஞர்கள் ருனா லைலா, சபீனா யாஷ்மின், கிராமிய பாடகர் மும்தாஜ் பேகம் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
ஷங்கர், ஈசான், லாய் என்ற மூன்று இந்திய இசையமைப்பாளர்கள் இணைந்து பத்தாவது உலக கோப்பை தொடரின் "தீம்" பாடலை இந்தி, இலங்கை, வங்கதேச மொழிகளில் அறிமுகம் செய்கின்றனர். இதற்குப்பின் 14 நாடுகள் பங்கேற்கும் 42 நாட்கள் நடக்கும் கிரிக்கெட் தொடரை வங்கதேசத்தின் பிரதமர் ஷேக் ஹசீனா, முறைப்படி அறிவித்து துவக்கி வைக்கிறார்.
அடுத்து வங்கதேச நிதியமைச்சர் முகித், இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் ஆசாத் அலி சர்கார், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவர் சரத் பவார், வங்கதேச கிரிக்கெட் போர்டின் தலைவர் வாழ்த்துரை வழங்குகின்றனர். அடுத்து அலங்கரிக்கப்பட்ட ரிக்ஷாவில் 14 அணியின் கேப்டன்களும், மைதானத்துக்குள் அழைத்து வரப்படுவார்கள். பின் மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள வங்கதேசத்தின் தந்தை முஜிபுர் ரஹ்மானின் ராட்சத உருவப்படத்தை, பிரதமர் ஷேக் ஹசீனா திறந்து வைக்கிறார்.
இதில் ஒவ்வொரு நாட்டுக்கும் தங்களது கலாசாரம், மரபு வழி ஹீரோக்களை வெளிப்படுத்த குறிப்பிட்ட நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் வங்கதேசத்துக்கு 20 நிமிடம் தரப்பட்டுள்ளது. இதில் 1952 ல் நடந்த மொழி இயக்கம், 1971ல் நடந்த விடுதலைப் போராட்டம் உள்ளிட்ட பல வரலாற்று நிகழ்வுகள் தொகுக்கப்பட்டு நிகழ்ச்சிகளாக நடத்தப்படுகின்றன. இது தவிர இந்தியா, இலங்கைக்கு தலா 12 நிமிடங்கள் தரப்பட்டுள்ளன. அதன் பின் கண்ணைக்கவரும் வகையிலான லேசர் ஷா வாண வேடிக்கைகள் நடக்கும்.
துவக்க விழாவில் பள்ளி, கல்லூரியை சேர்ந்த 2500 மாணவர்கள் மற்றும் 3500 ராணுவ வீரர்கள் பங்கேற்கவுள்ளனர். இதை அனைத்தும் பிரபல இந்திய நடனக்கலைஞர் சந்தோஷ் சேட்ஜி தலைமையில் நடக்கிறது. இதை ஒட்டி பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

உலக கிண்ணப் போட்டியில் டோனி விளையாட தடை: ஐசிசி

உலக கிண்ணப் போட்டியை முன்னிட்டு ஐசிசி சம்பந்தப்பட்ட விளம்பரங்களில் மட்டுமே வீரர்கள் நடிக்க அனுமதி கொடுக்கப்பட்டது. இதை மீறும் வீரர்கள் விளையாட தடை விதிக்கப்படும் என ஐசிசி அறிவித்திருந்தது.
ஆனால் ஐசிசி அறிவிப்புக்கு முன்னரே இந்திய வீரர்கள் பல விளம்பரங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தனர். இந்த பிரச்சனை தொடர்பாக டெண்டுல்கர் உள்ளிட்ட வீரர்கள் பிசிசிஐ யிடம் தங்களது கருத்துகளை தெரிவித்தனர்.
தற்போது டோனிக்கு இதில் பிரச்சனை எழுந்துள்ளது. அவர் நடித்த விளம்பரம் ஐசிசி வரைமுறைக்குட்பட்ட விளம்பர நிறுவனமில்லை என தெரியவந்துள்ளது. இதனால் அவர் மீது ஐசிசி நடவடிக்கை எடுக்கலாம் என தெரிகிறது.
பிசிசிஐ க்கும் இது தொடர்பாக கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த பிரச்னையில் நடவடிக்கை எடுக்கும் சூழல் ஏற்பட்டால் டோனி உலக கிண்ணத் தொடரில் விளையாட தடை விதிக்கப்படும் என தெரிகிறது. இதற்கிடையே விளம்பர நிறுவனம் தெரிவித்துள்ள விளக்கத்தில் ஐசிசி நடைமுறைகள் எதுவும் மீறப்படவில்லை என கூறப்பட்டுள்ளது.


உலகக் கோப்பை கிரிக்கெட்: அணிகளின் பலம், பலவீனம்

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பலம்வாய்ந்த அணிகளாக இந்தியா, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, இலங்கை அணிகள் கணிக்கப்பட்டுள்ளன.
அணியின் பலம், பலவீனம், சிறப்பு குறித்து ஓர் அலசல்.
அவுஸ்திரேலியா
பலம்: பேட்டிங்தான் ஆஸ்திரேலிய அணியின் மிகப்பெரிய பலம். ஸ்டிரைக் ரேட்டில், அதாவது அதிகமாக ரன்களை எடுத்துக் குவிக்கும் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது இந்த அணி. இளம் வீரர்கள் அதிகம் உள்ளது கூடுதல் பலம். எந்த சூழ்நிலையிலும் சமாளித்து விளையாடி ஆட்டத்தின் போக்கையே மாற்றும் திறன் உண்டு.
எதிரணிகளின் வியூகங்களை உடைத்து பேட்டிங்கில் சாதனை புரியும் ஷேன் வாட்சன் இந்த அணியின் மிகப்பெரிய பலம். மூன்றாவது முறையும் தொடர்ந்து உலகக் கோப்பையைப் பெற்றாக வேண்டும் என்கிற வெறியுடன் அவுஸ்திரேலிய அணி களமிறங்கும். கேப்டன் ரிக்கி பாண்டிங்கும், டேவிட் ஹஸ்லியும், கேமரோன் வொய்ட்டும் ரன்களைக் குவிப்பதில் சமர்த்தர்கள்.
பலவீனம்: பந்து வீச்சு சிறப்பாக இல்லாதது பெரிய பலவீனம். பொலிங்கர் தவிர மற்ற வீரர்கள் ரன்களை வாரி வழங்குபவர்களாக உள்ளனர். ஆரம்பப் பந்து வீச்சில் சமர்த்தரான ஸ்விங்கர் ஷான் டெய்ட் தன்னுடைய வேகப்பந்து வீச்சால் எதிரணியினரைப் பயமுறுத்தக் கூடும் என்றாலும் ஸ்பின்னர்கள் இல்லாத குறை அவுஸ்திரேலியாவின் மிகப்பெரிய பலவீனம். குறிப்பிட்டுக் கூறும்படியான சுழற்பந்து வீச்சாளர் அணியில் இல்லை. மூத்த வீரர்களான பாண்டிங், கிளார்க், பிரெட் லீ, வாட்சன் ஆகியோரின் ஆட்டத்தையே அணி பெருமளவில் சார்ந்துள்ளது.
கடந்த 15 ஆண்டுகளில் களமிறக்கப்பட்ட மோசமான "உலகக் கோப்பை அவுஸ்திரேலிய அணி' இதுதான் என்பது விமர்சகர்களின் கணிப்பு.
சிறப்பு: தொடர்ந்து 2 உலகக் கோப்பையை வென்றுள்ளதால் அவுஸ்திரேலிய அணிக்கு பொறுப்பு கூடியுள்ளது. முன்பு இருந்தது போல சிறப்பான அணியாக இல்லாவிட்டாலும் ஆட்டத்தைத் திசை திருப்பும் வெற்றி வீரர்கள் இருக்கின்றனர். இறுதிச் சுற்று வரை இந்த அணி முன்னேறக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
இந்தியா
பலம்: தொடக்க, நடுவரிசை ஆட்டக்காரர் (1 முதல் 7 வரை) சிறந்த பேட்ஸ்மென்களாக உள்ளது இந்திய அணியின் மிகப்பெரிய பலம். ஸ்டிரைக் ரேட்டில் முதலிடத்தில் உள்ளது. பெüலிங் எக்கானமியில் இரண்டாவது இடத்தில் உள்ளது அனுபவம் வாய்ந்த வீரர்கள், பெரிய ஆட்டங்களில் தொடர்ந்து விளையாடி வரும் அணி.
நெருக்கடியான சூழ்நிலையிலும் அணியை சிறப்பாக வழிநடத்தும் கேப்டன் தோனி ஆகியவை அணியின் பலம். சச்சின் டெண்டுல்கர், வீரேந்திர சேவாக், கெளதம் கம்பீர் மூவரும் இந்திய அணியின் துடுப்பாட்டத்திற்கு மிகப்பெரிய பலம். விராட் கோலி நான்காவது ஆட்டக்காரராகவும், யுவராஜ் சிங் ஐந்தாவதாகவும், கேப்டன் தோனி ஆறாவதாகவும், யூசுப் பதான் ஏழாவதாகவும் ஒரு பலமான ரன்களை எடுக்கும் பேட்டிங் பட்டாளம் இந்திய அணியின் தனிச் சிறப்பாக கருதப்படுகிறது.
பந்துவீச்சு என்று எடுத்துக் கொண்டாலும், வேகப்பந்துவீச்சில் ஜாகீர் கானின் திறமைக்கு முன் ஆரம்ப ஆட்டக்காரர்கள் பலரும் திணறாமல் இருக்க முடியாது. ஹர்பஜன் சிங், பியூஷ் சாவ்லா, அஸ்வின் ஆகிய மூவரும் சுழல்பந்து வீச்சில் சமர்த்தர்கள். கடந்த இரண்டாண்டுகளாக சாவ்லா களத்தில் இல்லை என்பது பலவீனம். இருந்தாலும் புதியவரவாக இருந்தாலும் களத்தில் தனது சுழல்பந்துவீச்சால் அசத்துகிறார் என்பது கண்கூடான உண்மை.
பலவீனம்: மற்ற அணிகளை ஒப்பிடும் போது விரைவாக விக்கெட்டை வீழ்த்தும் பந்து வீச்சாளர்கள் இல்லாதது பெரும் குறை. வீரர்கள் தொடர்ந்து சிறப்பாக ஆட்டத்தை வெளிப்படுத்ததாதும் பலவீனம். ஹர்பஜன் சிங்கையும், அஸ்வினையும் நம்பித்தான் இந்திய அணியின் பந்துவீச்சு உள்ளது என்பது பலவீனம்.
சிறப்பு: முந்தைய உலகக் கோப்பை அணியைக் காட்டிலும் பலமானதாக உள்ளது. பலமான பேட்டிங் வரிசை உள்ளதால் கோப்பையை வெல்லக்கூடிய அணிகளில் ஒன்றாக கணிக்கப்பட்டுள்ளது. தோனியின் அமைதியான, அரவணைப்பான கேப்டன்ஷிப் அணிக்கு பெரிய பிளஸ். அனைத்தும் சரியாக நடந்தால் விமர்சகர்கள் கணித்தபடி இறுதிச் சுற்றுக்கு இந்தியா முன்னேறும்.
இலங்கை
பலம்: பந்து வீச்சில் உலகின் நம்பர் 1 அணி. அதே போல எக்கானமி ரேட்டிலும் முதலிடம். அனுபவ வீரர்கள், வெற்றியை நோக்கி தொடக்கத்தில் இருந்தே முன்னேறுவது, உள்ளூர் சூழலில் விளையாடுவது ஆகியவை அணிக்கு பலம் சேர்க்கிறது.
லசித் மலிங்காவும், முத்தையா முரளீதரனும் பந்துவீச்சுக்கு வலு சேர்ப்பவர்கள். இந்திய அணி எந்த அளவுக்கு பேட்டிங்கில் பலமாக இருக்கிறதோ அந்த அளவுக்கு பந்துவீச்சில் பலமான அணி இலங்கை அணி. நுவன் குலசேகரா, ஏஞ்சலோ மேத்யூஸ் இருவரும் இந்தியத் துணைக்கண்டத்தின் ஆடுகளத்துக்கு ஏற்ப பந்துவீசும் ஆட்டக்காரர்கள். அதிகமாக பாராட்டப்படாவிட்டாலும் ரங்கனா ரெஹாத்தின் இடதுகைப் பந்துவீச்சு வெளியூர் அணிக்கு சவாலாக இருக்கக்கூடும்.
பலவீனம்: தரவரிசையில் முதல் 8 இடத்தில் உள்ள அணிகளில், பேட்டிங்கில் கடைசி இடத்தில் உள்ள அணி இலங்கை தான். நெருக்கடியான சூழலில் சிறப்பாக விளையாடத் திணறும் வீரர்கள். மோசமான ஸ்டிரைக் ரேட்.
சிறப்பு: 1996-ம் ஆண்டுக்குப் பின்னர் 2007-ல் சிறப்பாக விளையாடியது இலங்கை. ஆனாலும் இப்போது மோசமாக விளையாடி வருவது அணிக்கு கடும் நெருக்குதலை அளித்துள்ளது. அரை இறுதி வரை முன்னேற வாய்ப்பு இருக்கிறது. முதல் சுற்றிலேயே வெளியேறினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.
இங்கிலாந்து
பலம்: தனிப்பட்ட சில வீரர்கள் சிறப்பாக ஆடுவது அணியின் மிகப்பெரிய பலம். முக்கியமாக நடுவரிசையில் டிராட், பீட்டர்சன், பிராட், ஸ்வான் ஆகியோர் அதிரடியாக ஆடி ரன் குவிக்கின்றனர். பந்து வீச்சும் சிறப்பாகவே உள்ளது. ஒருநாள் ஆட்டத்தை எப்படி ஆட வேண்டும் என்பதை தெரிந்து வைத்துள்ள அணி.
பலவீனம்: ஸ்டிரைக் ரேட் குறிப்பிடும் வகையில் இல்லை. அணியின் கூட்டு முயற்சியாக இல்லாமல், ஒரு சில வீரர்களின் சிறப்பான ஆட்டத்தால் மட்டுமே வெற்றி பெறுகிறது.
சிறப்பு: டெஸ்ட் போட்டியில் சிறப்பாக ஆடும் இந்த அணி, ஒரு நாள் போட்டிகளில் சோபிக்கத் தவறி வருகிறது. சில தனிப்பட்ட வீரர்களின் ஆட்டத்தைத் தவிர மற்றவர்களின் ஆட்டம் சொல்லிக் கொள்ளும்படி இல்லை. ஒரு சில அணிகளுக்கு அதிர்ச்சித் தோல்விகளைத் தரக்கூடிய அணியாக இருக்கிறது இங்கிலாந்து. அதிர்ஷ்டம் இருந்தால் அரை இறுதி வரை முன்னேறும், அவ்வளவே.
மேற்கிந்தியத் தீவுகள்
பலம்: கெய்ல், பிராவோ, சந்தார்பால் ஆகியோர் அணியின் பலம். திடீர் அதிரடியால் வெற்றி பெறும் அணி.
பலவீனம்: தரவரிசையில் 9-வது இடத்தில் பின்தங்கியுள்ளது. பேட்டிங், பந்து வீச்சும் இரண்டுமே தகராறு. எப்போது, எப்படி விளையாடிவார்கள் என்று யாருக்குமே தெரியாது.
சிறப்பு: கோப்பையை வெல்ல 70 சதவீத வாய்ப்பு இந்த அணிக்கு இருப்பதாக முன்னாள் கேப்டன் கிளைவ் லாயிட் தெரிவித்துள்ளார். ஆனாலும் கால் இறுதி வரை முன்னேறுவதே சிரமம் என்பதுதான் விமர்சகர்களின் கருத்து.
தென் ஆப்பிரிக்கா
பலம்: தொடர்ந்து சிறப்பாக விளையாடி வருவருவதும், வேகப்பந்து வீச்சு சிறப்பாக இருப்பதும் இந்த அணியின் முக்கிய பலம். தொடக்க பேட்ஸ்மேன்களும், நடுவில் களம் இறங்குபவர்களும் சிறப்பாக விளையாடி வருகின்றனர். எந்தச் சூழ்நிலையிலும் களம் இறங்கிச் சிறப்பாக விளையாடும் செல்லும் ஜேக்கஸ் காலிஸ், ஹஷிம் ஆம்லா வெற்றிகரமான கேப்டன் கிரேம் ஸ்மித் ஆகியோர் அணியை வெற்றிப் படிக்கட்டுகளில் ஏற்றுவார்கள்.
பலவீனம்: நெருக்கடியான சூழ்நிலையில் காலிஸ் தவிர மற்ற வீரர்கள் சிறப்பாக ஆடுவது இல்லை. சராசரி என்ற நிலையில் உள்ள ஸ்டிரைக் ரேட், நடுவரிசை, பின்வரிசை வீரர்கள் நிலைத்து நின்று ஆடாதது, சிறந்த சுழற்பந்து வீச்சாளர் இல்லாதது, காலிஸையே பெருமளவில் சார்ந்திருப்பது ஆகியவை அணியின் பலவீனம்.
சிறப்பு: வெல்வதற்கு சிறந்த, கடினமான அணி என்ற பெயரை பெற்றுள்ளது. இருந்த போதும் எதிரணி வலிமையானதாக இருந்தால் அதை எதிர்கொள்ளும் நிதானம் தென் ஆப்பிரிக்க அணிக்கு இல்லை என்பது பார்வையாளர்களின் கணிப்பு. நெருக்குதல் காரணமாக சில சமயங்களில் தோல்வி ஏற்படுகிறது. ஜாக்ஸ் காலிஸ் அணியின் நம்பிக்கை நாயகன். கோப்பையை வெல்லக்கூடிய அணிகளில் ஒன்றாக கருதப்படுகிறது.
நியூசிலாந்து
பலம்: ஸ்டிரைக் ரேட், எகானமியில் 3-வது இடம். நெருக்கடியை சமாளித்து ஆடும் திறன். வலுவான பேட்டிங், தனிப்பட்ட முறையில் வீரர்கள் சிறப்பாக ஆடி வருவது இவையே இந்த அணியின் முக்கிய பலம்.
பலவீனம்: பெரிய போட்டிகளிலோ, தொடர்களிலோ வெற்றி பெற்றதில்லை. இந்திய அணியைப் போன்றே இங்கும் விரைவில் விக்கெட்டை வீழ்ந்தும் பந்து வீச்சாளர்கள் இல்லை.
சிறப்பு: சிறப்பாக விளையாடினால் மட்டுமே அரை இறுதி வரை முன்னேறலாம் என்று கணிக்கப்பட்டுள்ள அணி நியூஸிலாந்து. ஆனாலும் அணி சிறப்பாக இல்லாதது நியூஸிலாந்துக்கு பின்னடைவாக உள்ளது. சமீபத்திய தொடர்களில் ஏற்பட்ட படுதோல்விகள் அந்த அணிக்கு கடும் நெருக்குதலை அளித்துள்ளது.
பாகிஸ்தான்
பலம்: பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியுள்ள போதிலும், பந்து வீச்சு பலத்தில் 3-வது இடத்தில் உள்ளது. நெருக்கடியான சூழலில் சிறப்பாக விளையாடக் கூடிய அணிகளில் இதுவும் ஒன்று. சூதாட்ட சர்ச்சைக்குப்பின் கிடைத்துள்ள வெற்றிகளால் பெற்ற உத்வேகம் அணியின் முக்கிய பலம்.
பலவீனம்: சிறப்பாக ஆடாத பேட்ஸ்மேன்கள். சராசரிக்கும் குறைவான ஸ்டிரைக் ரேட், கூட்டு முயற்சி...இப்படியாக, தொடர்ந்து சிறப்பாக ஆடமுடியாமல் தவிக்கும் அணி. முக்கிய பந்துவீச்சாளர்கள் இல்லாமல் களம் இறங்குவதால் நெருக்கடி.
சிறப்பு: களத்தில் ஆக்ரோஷம் காட்டுவதில் பாகிஸ்தான் அணிக்கு நிகர் அதுவே. சொல்லும்படியான வீரர்கள் இல்லை. ஆனாலும் அணியின் பலவீனத்தால் கால் இறுதிக்கு மேல் முன்னேறாது என விமர்சகர்கள் கணித்துள்ளனர்.

மீண்டும் இந்தியாவை வீழ்த்துவோம்: மொர்டசா

கடந்த 2007 தொடரைப் போல இந்த உலக கிண்ணப் போட்டியிலும் இந்திய அணியை வீழ்த்துவோம் என வங்கதேச அணியின் வேகப்பந்து வீச்சாளர் மொர்டசா தெரிவித்துள்ளார்.
வெஸ்ட் இண்டீசில் நடந்த 2007 உலக கோப்பை தொடரில் இந்திய அணி தனது முதல் லீக் போட்டியில் வங்க தேசத்திடம் வீழ்ந்தது. இந்த தோல்வி காரணமாக முதல் சுற்றுடன் வெளியேற நேரிட்டது.
இது குறித்து காயம் காரணமாக அணியில் இருந்து விலகியுள்ள வங்கதேசத்தின் மொர்டசா கூறியது: கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் இந்திய அணியை வீழ்த்தினோம். அதே தொடரில் தென் ஆப்ரிக்க அணியையும் சாய்த்தோம்.
இதுபோன்ற சாதனை வெற்றிகளை 2007 ல் எங்களால் செய்ய முடிந்த போது இப்போதும் ஏன் செய்ய முடியாது. இம்முறை சொந்த மண்ணில் மீண்டும் இந்திய அணியை வீழ்த்த தயாராகியுள்ளோம்.
இந்த தொடரில் ஒவ்வொரு போட்டியும் எங்களுக்கு பைனல் போன்றது. இதனால் இவற்றில் சிறப்பாக செயல்பட்டு, முதலில் காலிறுதிக்கு முன்னேறுவது தான் எங்களது முதல் குறிக்கோள். இது தவிர இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் அணிகளையும் வீழ்த்த முயற்சிப்போம்.
குறிப்பிட்ட நாள் எங்களுடையதாக இருந்தால் அன்று எந்த அணியையும் தோற்கடிக்க முடியும். காயம் காரணமாக இம்முறை தொடரில் விளையாட முடியாதது வருத்தம் தான். இத்தொடருக்குப் பின் மீண்டும் அணியில் இடம் பெற முயற்சிப்பேன். இவ்வாறு மொர்டசா கூறினார்.