Thursday, 24 March 2011

முட்டுக்காடு கடற்கரையில் ஒதுங்கிய மர்மப் பொருளால் மீனவர்கள் அச்சம்!



நீலாங்கரை அடுத்த முட்டுக்காடு, கரிகாட்டுக்குப்பம் பகுதி மீனவர்கள் இன்று அதிகாலை மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். அப்போது கரையில் சிறிய “லைட்” வெளிச்சத்துடன் மின்னிய படி மர்ம பொருள் ஒன்று கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.


சுமார் 4 அடி நீளத்தில் இரண்டு உருளைகள் சேர்த்து வைத்தப்படி இருந்தது. முன்பகுதி கருப்பு நிற கூம்பு உருளை வடிவத்திலும் பின்பகுதி முழுவதும் சிகப்பு நிறத்திலும் காணப்பட்டது.

சுமார் 15 கிலோ எடையும் பின்பகுதியில் நீண்ட வயரும் இணைக்கப்பட்டுள்ளது. இதனை பார்த்ததும் பயந்துபோன மீனவர்கள் இதுகுறித்து நீலாங்கரை போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசார் விரைந்து வந்து மர்ம பொருளை கைப்பற்றி விசாரணை நடத்தினர். கடலோர பாதுகாப்புப்படை போலீசாரும் வந்து விசாரித்து வருகிறார்கள். கடற்கரை மணலில் மர்ம பொருள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

கைப்பற்றப்பட்ட மர்ம பொருள் என்ன? என்பது இதுவரை தெரியவில்லை. அது ராக்கெட் லாஞ்சராக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

விமானத்தில் பயன்படுத்தக்கூடிய வெடி பொருளாக இருக்கலாம் என்றும் சந்தேகிக்கிறார்கள். மீனவர்கள் அச்சம் மர்ம பொருள் எப்படி இங்கே வந்தது? கொண்டு வந்து விட்டு சென்றவர்கள் யார்? என்பது மர்மமாக உள்ளது.

இதனால் மீனவர்கள் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ளது. இன்று காலை அவர்கள் அச்சத்துடனேயே மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். மர்ம பொருள் குறித்து சோதனை செய்ய வெடி பொருள் பாதுகாப்புப்படை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் சோதனை செய்த பிறகே மர்ம பொருள் குறித்து தெரிய வரும். இதனால் முட்டுக்காடு கடலோர பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது

No comments:

Post a Comment