Tuesday, 5 April 2011

2015 உலகக் கோப்பை போட்டிக்கு 10 அணிகள் தான்: ஐசிசி



தற்போது டெஸ்ட் போட்டியில் விளையாடி வரும் 10 அணிகள் மட்டுமே 2015 உலகக் கோப்பைப் போட்டியில் பங்கேற்கும்.
மின்னோஸ் எனப்படும் குட்டி அணிகள் அனுமதிக்கப்படாது என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தெரிவித்துள்ளது.
இதன் மூலம் ஹாலந்து, அயர்லாந்து போன்ற அணிகள் ஆஸ்திரேலியா, நியூசிலாந்தில் 2015ம் ஆண்டு நடைபெறவுள்ள உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த அணிகள் நடப்பு உலகக் கோப்பைப் போட்டியில் பல ஆச்சரியங்களை நிகழ்த்தியவை என்பது நினைவிருக்கலாம்.
10 அணிகளை மட்டுமே அனுமதிப்பது என்ற முடிவுக்கு ஐசிசியின் செயற்குழு நேற்று ஒப்புதல் அளித்தது. மேலும் 2019ம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெறவுள்ள உலகக் கோப்பைப் போட்டிக்கு, அனைத்து அணிகளுமே,  இந்த 10 அணிகள் உள்பட, தகுதி அடிப்படையில் தான் தேர்வு செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஐசிசி வெளியிட்டுள்ள அறிக்கையில், 2015ல் ஆஸ்திரேலியா, நியூசிலாந்தில் நடைபெறவுள்ள உலகக் கோப்பைப் போட்டித் தொடரில் தற்போது முழு நேர உறுப்பினர்களாக உள்ள (டெஸ்ட் ஆடும்) 10 நாடுகளை மட்டுமே அனுமதிப்பது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதே சமயம், 2019 உலக்க கோப்பைப் போட்டிக்கு தகுதி அடிப்படையி்ல் தான் அணிகள் தேர்வு செய்யப்படும் என்று இந்த பத்து நாடுகளுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், குட்டி அணிகளும் ஐசிசியின் சர்வதேச போட்டிகளில் பங்கேற்க வகை செய்யும் விதத்தில் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் டுவென்டி 20 உலகக் கோப்பைப் போட்டித் தொடரில் அவர்களையும் சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி டுவென்டி 20 உலகக் கோப்பைப் போட்டி தொடரில் பங்கேற்கும் அணிகளின் எண்ணிக்கை 16 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
இதன் மூலம் பத்து முழு நேர உறுப்பினர்கள் தவிர 6 அசோசியேட் உறுப்பு நாடுகளும் கலந்து கொள்ள முடியும். இந்தியா, இலங்கை, வங்கதேசம் இணைந்து நடத்திய 10வது உலகக் கோப்பைப் போட்டி மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. இதற்கு இந்த மூன்று நாடுகளின் தலைவர்களும் தான் முக்கியக் காரணம். அவர்கள் கொடுத்த ஒத்துழைப்புக்காக நன்றி கூறிக் கொள்கிறோம்.
50 ஓவர் ஒரு நாள் போட்டிகளுக்கு இன்னும் ரசிகர்கள் மத்தியில் மவுசு குறையவில்லை என்பதை இது வெளிக்காட்டியுள்ளது. மேலும், ஒரு நாள் போட்டிக்கான மிகச் சிறந்த, மிகப் பிரமாண்டமான விளம்பரமாகவும் இந்தப் போட்டித் தொடர் மாறியுள்ளது என்று ஐசிசி தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment