Sunday, 20 February 2011

1,000 அடி உயரத்திலிருந்து விழுந்து உயிர் பிழைத்த அதிசய மனிதர்



பிரிட்டனில் மலை சிகரத்தில் 1,000 அடி உயரத்திலிருந்து தவறி விழுந்த ஆடம் பாட்டர் என்பவர் அதிசயமாக உயிர் பிழைத்துள்ளார்.
பிரிட்டன் நாட்டை சேர்ந்த மலை ஏற்ற வீரரான ஆடம் பாட்டர் (35) என்பவர் ஸ்காட்லாந்தில் உள்ள "பென் நேவிச்' அருகே உள்ள உயர்ந்த மலை சிகரமான "ஸ்குர் சோனிச் மோர்' மீது குழுவினருடன் ஏறி கொண்டிருந்தார். அந்த மலையில், பாட்டர், 3,589 அடி உயரத்தில் இருந்த போது, எதிர்பாராதவிதமாக அவரது கால் வழுக்கியது. இதனால், அந்த மலை சரிவிலும், செங்குத்துப் பாறைகளில் உருண்டு 1,000 அடி பள்ளத்திற்குள் விழுந்தார்.
அதிர்ச்சியடைந்த அவரது குழுவினர் மீட்புப் படைக்கு தகவல் தெரிவித்தனர். மீட்புப் படையினர், ஹெலிகாப்டர் மூலம் ஆடம் பாட்டரை தேட துவங்கினர். எனினும், 1,000 அடி உயரத்திலிருந்து விழுந்ததால், பாட்டர் இறந்திருக்கலாம் என்று நம்பினர். ஆனால், யாரும் எதிர்பாராத வகையில், அந்த மலையின் ஒரு பகுதியில் இருந்த சமதளத்தில் ஆடம்பாட்டர், நின்றபடி வரைபடத்தை பார்த்துக் கொண்டிருந்தார்.
அவரது உடலில் சிறிய சிராய்ப்புகளை தவிர, பெரிய அளவில் காயம் எதுவுமில்லை. பின்னர், மீட்புக் குழுவினர், அவரை மீட்டு மருத்துவனையில் சேர்த்தனர்.
இதுகுறித்து ஆடம்பாட்டர் கூறியதாவது:
மலை சிகரத்தில், எனது குழுவினருடன் மலையேற்ற உபகரணங்களுடன் தான் சென்று கொண்டிருந்தேன்.அங்கிருந்த ஒரு பாறை மீது நடந்த போது அதில் படர்ந்திருந்த ஐஸ்கட்டிகள் வழுக்கி விட்டன. இதனால், நான் தவறி விழுந்து விட்டேன். எனினும் மலை சரிவில் உருளும் போது, கைக்கு கிடைத்த ஆதாரங்களை பற்றிக் கொண்டேன். பின்னர், பாறை இடுக்குகளில் கால் வைத்து ஏறி சமதளத்திற்கு வந்து விட்டேன். இப்போது, நான் நலமாக இருக்கிறேன். இந்த ஆண்டில், எவரெஸ்ட் சிகரத்தில் ஏற திட்டமிட்டுள்ளேன் என்று ஆடம் பாட்டர் கூறினார்

No comments:

Post a Comment