மிகவும் வசதியான அந்நாட்டில் லட்சக்கணக்கான மக்கள் உணவு, குடிநீர், மின்சாரம், சுகாதாரப் பாதுகாப்பு இவை எதுவுமின்றி தவித்து வருகின்றனர். ஜப்பானில் கடந்த 11 ம் திகதி 8.9 புள்ளிகள் அளவில் பயங்கர நிலநடுக்கம் அதன் விளைவாக பயங்கர சுனாமி ஏற்பட்டது. இதில், புக்குஷிமா, மியாகி மற்றும் ஐவேட் ஆகிய மாகாணங்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டன. யூரேஷியன், பசிபிக், வட அமெரிக்கா மற்றும் பிலிப்பைன்ஸ் கண்டத் திட்டுகள் ஒன்றிணையும் இடத்தின் மேற்பகுதியில் ஜப்பான் அமைந்துள்ளது. இதனால் இந்த கண்டத் திட்டுகள் ஒன்றோடு ஒன்று உரசும் போது அல்லது இடிக்கும் போது அங்கு நிலநடுக்கம் ஏற்படும். இது ஜப்பானில் வழக்கம் தான். ஆனால் சமீபத்திய பயங்கர நிலநடுக்கம் ஜப்பானை 8 அடி நகர்த்திவிட்டதாக அமெரிக்க பூகற்பியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இதை செயற்கைக்கோள் வரைபட உதவி கொண்டு நிரூபித்தனர். அமெரிக்க நிலவியல் மற்றும் நிலநடுக்க ஆய்வாளர் பால் எர்ல் இதுகுறித்து கூறியதாவது: சமீபத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஒட்டு மொத்த ஜப்பான் தீவே 8 அடிக்கு நகர்த்தப்பட்டுள்ளது. இந்த 8 அடி என்பது மிகவும் கவலைக்குரியது. இந்த நகர்வு பசிபிக் மற்றும் வட அமெரிக்க கண்டத் திட்டுகளின் மோதலால் ஏற்பட்டுள்ளது. பசிபிக் திட்டு, வட அமெரிக்க கண்டத் திட்டின் மேற்குப் பகுதியின் மீது மிக வேகமாக மோதியதால் இந்த நகர்வு ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற மோதல்களால் தான் நிலநடுக்கம் உருவாகிறது. மேலும் இந்த இரு கண்டத் திட்டுகள் இடையிலான மோதலால் ஆண்டுக்கு 3.3 அங்குல நகர்வு நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நகர்வை கணணி அடிப்படையிலான புவியியல் தகவல் முறைமை(ஜி.எஸ்.ஐ.,) மூலமான வரைபடத்திலும் நாம் தெளிவாக பார்க்க முடியும். இவ்வாறு பால் எர்ல் தெரிவித்துள்ளார். மியாகி மாகாணத்தில் உள்ள மினாமிசன்ரிக்கு என்ற நகரைச் சேர்ந்த 10 ஆயிரம் பேர் காணாமல் போய்விட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவர்கள் நிலநடுக்கம் மற்றும் சுனாமியில் பலியாகியிருக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது. இதுவரை புக்குஷிமா மற்றும் மியாகி மாகாணங்களில் இறந்தவர்களின் 600 உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஐவேட் மாகாணத்தில் ரிக்குஜென்டாகடா நகரில் 5,000 வீடுகள் இன்னும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. தற்போது 3,80,000 ஆயிரம் மக்கள் ஐந்து மாகாணங்களில் அமைக்கப்பட்டுள்ள 1,300 தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இரண்டரை லட்சம் பேர் மின்சாரம் இன்றியும், 14 லட்சம் பேர் குடிநீர் மற்றும் உணவு இன்றியும் அவதிப்பட்டு வருகின்றனர். மீட்புப் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. பிரதமர் நவோட்டோ கான் நேற்று வெளியிட்ட அறிக்கையில்,"இந்த பேரழிவைக் கடந்து விரைவில் மீண்டு விடுவோம் என்ற நம்பிக்கையுடன் செயலாற்ற வேண்டும். கடந்த 65 ஆண்டுகளில் ஜப்பான் கண்டிராத மிக மோசமான சீரழிவு இது" என்று தெரிவித்துள்ளார். மிகவும் வளர்ந்த நாடான ஜப்பான் இயற்கைப் பேரழிவில் சிக்கித் தவிக்கிறது. உலக நாடுகள் ஜப்பானுக்கு உதவி செய்ய முன்வந்துள்ளன. பல்வேறு நாடுகளில் இருந்து மீட்புப் பணிக் குழுக்கள் ஜப்பானுக்குச் சென்றுள்ளன. போர்க்கால அடிப்படையில் அங்கு மீட்புப் பணிகள் நடந்து வருகின்றன. |
Monday, 14 March 2011
ஜப்பானில் 12 ஆயிரம் பேர் பலி: மின்சாரம் மற்றும் குடிநீர் இல்லாமல் மக்கள் தவிப்பு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment