Saturday, 12 March 2011

ஜப்பான் நிலநடுக்கத்திற்கு இதுவரை 1300 பேர் பலி: மீட்புப் பணிகள் தீவிரம்



நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட ஜப்பானின் வடகிழக்குப் பகுதிகளில் மீட்புப் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன.
ராணுவத்தின் முப்படையினரும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இந்த இயற்கைப் பேரழிவில் சிக்கி இதுவரை 433 பேர் பலியானதாகவும், 784 பேர் காணாமல் போய்விட்டதாகவும் அந்நாட்டு அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஆனால் 1300 க்கும் மேலானோர் பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
ஜப்பானில் நேற்று முன்தினம் பயங்கர நிலநடுக்கம், அதைத் தொடர்ந்து சுனாமி தாக்குதல் நிகழ்ந்தது. சமீபத்தில் நியூசிலாந்தில் ஏற்பட்டதை விட 8000 மடங்கு அதிக சக்தி கொண்ட இந்த நிலநடுக்கத்தால், ஜப்பானின் வடகிழக்குப் பகுதியில் புக்குஷிமா, மியாகி, ஐவேட் மாகாணங்கள் பெருமளவு பாதிக்கப்பட்டன.
புக்குஷிமா மாகாணத்தின் வடகிழக்கில் ஓர் அணை உடைந்ததால், அப்பகுதி வெள்ளத்தில் மூழ்கியது. மினாமிசோமா பகுதியில் 1800 வீடுகள் நாசம் அடைந்துள்ளன. ஐவேட் மாகாணத்தில் ஒரு சிறு நகரம் வெள்ளத்தில் இன்னும் மூழ்கிக் கிடக்கிறது.
81 பேர் உயிருடன் மீட்பு: வடகிழக்கு கடற்கரையோரம் சென்று கொண்டிருந்த நான்கு ரயில்கள் பற்றிய தகவல் எதுவும் இல்லை. அப்பகுதியில் 100 பயணிகளுடன் சென்று கொண்டிருந்த கப்பல், வேறொரு இடத்தில் தூக்கி வீசப்பட்டு கிடந்தது. அதனுள் சிக்கிக் கொண்டிருந்தவர்களில் 81 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். மற்றவர்கள் கதி தெரியவில்லை.
மியாகி மாகாணத்தின் கெசன்னுமா பகுதியில் பல்வேறு இடங்களில் தீ விபத்துகள் நிகழ்ந்தன. மாகாணத்தின் மூன்றில் ஒரு பங்கு பகுதி வெள்ளத்தில் மிதக்கிறது. செண்டாய் நகர துறைமுகம், விமான நிலையம், விளைநிலங்கள் அனைத்தும் கடல்நீரில் மூழ்கிவிட்டன.
தலைநகர் டோக்கியோவில் நில அதிர்வால் நேற்று முன்தினம் மெட்ரோ ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் 40 லட்சம் வீடுகள் இருளில் மூழ்கின. எனினும் நேற்று அங்கு இயல்பு வாழ்க்கை திரும்பியது.
சுனாமி தாக்குதலில் பல கிராமங்கள் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. ஒரு நகரம் முற்றிலும் அழிந்து விட்டது. இதுவரை 2.15 லட்சம் பேர் தங்கள் வீடுகளை இழந்து விட்டனர். 10 லட்சம் பேர் குடிநீர் கிடைக்காமல் தவிக்கின்றனர் என அந்நாட்டு அதிகாரிகள் கூறியுள்ளனர். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பொருட்சேதம் இன்னும் மதிப்பிடப்படவில்லை.
மீண்டும் நிலநடுக்கம்: ஜப்பானில் நேற்று மீண்டும் 100 க்கும் மேற்பட்ட முறை நிலநடுக்கங்கள் அதே வடகிழக்குப் பகுதியில் நிகழ்ந்தன. அவை அனைத்தும் ரிக்டர் அளவுகோலில் 6 புள்ளிகள் வரை பதிவாகின. நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகள் அனைத்திலும் மீட்புப் பணிகள் முழுவீச்சில் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
மீட்புப் பணியில் ஜப்பான் ராணுவத்தின் முப்படை வீரர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வீடுகளை இழந்த இரண்டு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தங்குவதற்காக 1300 தற்காலிக முகாம்கள், ஐந்து மாகாணங்களில் அமைக்கப்பட்டுள்ளன.
செண்டாய் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளம் பாதித்த இடங்களில் இறந்தவர்களின் உடல்களை மீட்கும் பணி நடக்கிறது. செண்டாயில் மட்டும் 300 க்கும் அதிகமான உடல்கள் நேற்று மீட்கப்பட்டன. நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் பாதிக்கப்பட்ட இடங்களை ஜப்பான் பிரதமர் நவோட்டோ கான் நேற்று ராணுவ ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்டார்.
உலக நாடுகள் உதவி: தென்கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் இருந்து நிலநடுக்க மீட்புப் பணியில் ஈடுபடுவதற்காக பல்வேறு குழுக்கள் ஜப்பானுக்கு சென்றுள்ளன.
அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளும் ஜப்பானுக்கு உதவிக்கரம் நீட்டியுள்ளன. மீட்புப் பணியில் டோக்கியோவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அமெரிக்க விமானம் ஒன்று பயன்படுத்தப்பட்டு வருகிறது. அமெரிக்காவில் இருந்து மற்றொரு விமானமும் நேற்று ஜப்பானுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

No comments:

Post a Comment