Saturday, 12 March 2011

ஜப்பானில் இரண்டாவது அணு உலையும் கசியும் அபாயம்



ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக சேதமடைந்த பியூகுஷிமா மின் நிலையத்தில் 2 வது அணு உலையில் தீவிரப் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
வடக்கு ஜப்பானில் உள்ள இந்த அணுமின் நிலையத்தில் நேற்று பெரும் வெடிப்பு ஏற்பட்டது. அவசர நிலை குளிர்விக்கும் முறை பாதிக்கப்பட்டதால் இந்த வெடிப்பு ஏற்பட்டது. இதே பிரச்சனை அணுமின் நிலையத்தின் முதல் அணு உலைக்கும் ஏற்பட்டு இருந்தது.
அணு உலை அபாய நிலையை எட்டியதை தொடர்ந்து அதற்கு அருகாமையில் வசிக்கும் 1 லட்சத்து 70 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர் என ஐ.நா கண்காணிப்பு அமைப்பு கூறியது. ஜப்பானின் வட கிழக்கு பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் ஆயிரம் பேர் இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது.
இயற்கை பேரிடரின் துயரத்தை முழுமையாக உணர்ந்த நிர்வாகத்தினர் நிவாரண பணியை முடுக்கி விட்டுள்ளனர். மீட்புப் பணியில் உள்ள துருப்புகளின் எண்ணிக்கை இரு மடங்காக ஆக்கப்பட்டு ஒரு லட்சம் வீரர்கள் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.
பியூகிஷிமாவில் உள்ள மக்களின் பீதியை குறைக்க ஜப்பானிய அரசு முயற்சிக்கிறது. அணு மின் உலையில் பாதுகாப்பு எல்லைக்கு அதிகமாக கதிர் வீச்சு வெளியேறுவதாக ஊடகத் தகவல்கள் கூறுகின்றன. டெப்கோ எனப்படும் டோக்யோ எலக்ட்ரிக் பவர் நிறுவனம் 2 வது அணு உலையில் குளிர்விக்கும் முறை பழுதடைந்ததை தெரிவித்தது.
அரசு செய்தித் தொடர்பாளர் யுகியோ எடனோ கூறுகையில்,"அணு உலையை குளிர்விக்க சில கதிர்வீச்சு பொருள்கள் செலுத்தப்பட்டன" என்றார். அணு உலையின் நிலைமையை ஸ்திரப்படுத்த முடியும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
கியுபோ செய்தி நிறுவனம் டெப்கோ தரப்பு தகவலை ஆதாரம் காட்டி அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மேல் கதிர்வீச்சு வெளியேறுவதாக செய்தி வெளியிட்டது. ரேடியோ கதிர்வீச்சு காரணமாக 15 பேர் அணு உலைக்கு அருகாமையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக டெப்கோ தெரிவித்துள்ளது.
அணு உலை வெடிப்பைத் தொடர்ந்து பியூகுஷிமாவை சுற்றி உள்ள மக்களை வெளியேற்றும் பரப்பளவை இரு மடங்காக அதிகரித்தது. ஐ.நா வின் அணு கண்காணிப்பு அமைப்பான சர்வதேச அணுசக்தி கழகம் கூறுகையில்,"பியுகுஷிமாவை சுற்றி 20 கி.மீ வரை மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்" என்றார்.

No comments:

Post a Comment