Saturday, 12 March 2011

இந்தோனேஷியா மற்றும் பிலிப்பைன்சில் சுனாமி தாக்குதல்: கனடாவில் சுனாமி எச்சரிக்கை




ஜப்பானில் ஏற்பட்டு வரும் தொடர் நிலநடுக்கம் மற்றும் சுனாமி தாக்குதலின் எதிரொலியாக அமெரிக்காவின் கலிபோர்னியா, ஹவாய் தீவு, இந்தோனேஷியா மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய பகுதிகளிலும் சுனாமி தாக்குதல் ஏற்பட்டுள்ளது.
கடந்த 2004 ம் ஆண்டு இந்தோனேஷியாவில் சுனாமி தாக்கி 2 லட்சத்து 30 ஆயிரம் பேர் பலியானார்கள். இதனால் இந்தோனேஷியாவில் பெரும் பீதி ஏற்பட்டது. ஜப்பானை சுனாமி தாக்கிய சில மணி நேரத்தில் இந்தோனேஷியா, பிலிப்பைன்ஸ், ஹவாய் தீவுகளில் லேசான அளவில் சுனாமி பேரலைகள் உருவானது. அவை கடற்கரைப் பகுதியை தாக்கியது. ஆனால் பெரிய அளவில் சேதம் ஏற்பட வில்லை.
அமெரிக்காவின் வடக்கு கலிபோர்னியா கடற்கரை பகுதியில் கடல் அலைகள் வழக்கத்தைவிட சீற்றத்துடன் காணப்பட்டது. இதனால் மக்கள் பீதியுடன் அந்த இடத்தை விட்டு வெளியேறினார்கள். ஹவாய் தீவுகளில் ஓரு கடற்கரை பகுதியையும் சுனாமி அலைகள் லேசாக தாக்கியது. முன்னெச்சரிக்கையாக அங்கிருந்த மக்கள் வெளியேற்றப்பட்டனர்.
ஜப்பானில் இருந்து 6200 கி.மீ. தொலைவில் ஹவாய் தீவுகள் உள்ளன. சுனாமியின் தாக்கம் ஹவாய் தீவு வரை இருந்தது. ஜப்பானை சுனாமி தாக்கிய 90 நிமிடத்தில் ஹவாய் தீவுகளை சுனாமி தாக்கியது. தொடர்ந்து சுனாமி தாக்கலாம் என்றுகருதி உள்ளூர் அதிகாரிகளும், ராணுவத்தினரும் உஷார் நிலையில் வைக்கப்பட்டனர். சாலைகள் மூடப்பட்டு போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
ஹவாய் தீவுகளில் உள்ள மவுயி, காவுய், பிக் ஐலண்ட் ஆகிய 3 பெரிய துறைமுகங்கள் மூடப்பட்டன. அங்கு மீட்பு பணிக்கு உதவ அமெரிக்கா தனது "பேர்ல் ஹார்பர்" துறைமுகத்தில் போர் கப்பல்களை தயார் நிலையில் இருக்குமாறு உத்தரவிட்டு இருந்தது.
ஆனால் சுனாமி பெரிய அளவில் தாக்கவில்லை என்றாலும் வடக்கு கரோலினாவிலும், ஹவாய் தீவுகள் பகுதியிலும் பீதி நிலவியது. பல மணி நேரம் கழித்து வாகன போக்குவரத்துக்கு சாலைகள் திறக்கப்பட்டன.
அமெரிக்க அதிபர் ஒபாமா ஹவாய் தீவில் சுனாமி தாக்குதல் பற்றி உடனுக்குடன் அறிந்து தேவையான உத்தரவுகளை பிறப்பித்தார். அதிபர் ஒபாமாவுக்கு சொந்த ஊர் ஹவாய் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் அவர் தனிக்கவனம் செலுத்தினார்.
சிலி நாட்டில் கடந்த ஆண்டு சுனாமி தாக்கியதில் 500 பேர் பலியானார்கள். இதனால் அங்கும் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. கனடாவிலும் கடற்கரை பகுதியில் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. அலைகள் ஆக்ரோஷத்துடன் சீறிப் பாய்ந்தன. மக்கள் வெளியேற்றப்பட்டு மீட்பு படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டனர். ஆனால் சுனாமி தாக்கவில்லை.

No comments:

Post a Comment