Saturday, 12 March 2011

சீனாவில் நிலநடுக்கம்: 18000 வீடுகள் சேதம்



சீனாவில் நேற்று முன்தினம் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பலியானோரின் எண்ணிக்கை 25 ஆக அதிகரித்துள்ளது. மேலும் பலர் இறந்திருக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.
சீனா - மியான்மர் எல்லை அருகில் அமைந்துள்ள யுன்னான் மாகாணத்தில் உள்ள இங்ஜியாங் பகுதியில் நேற்று முன்தினம் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவு கோலில் 5.8 புள்ளிகள் பதிவான இந்நிலநடுக்கத்தில் அப்பகுதியைச் சேர்ந்த ஆயிரத்து 264 வீடுகள், அடுக்குமாடிக் குடியிருப்புகள் தரைமட்டமாயின.
மேலும் 17 ஆயிரத்து 658 வீடுகள் சேதம் அடைந்தன. லாமங் கிராமத்தில் 80 சதவீத வீடுகள் அழிந்துவிட்டன. ஒரு லட்சத்து 27 ஆயிரத்து 100 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.
இந்த நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 25 ஆக அதிகரித்துள்ளது. ஆனால் இடிபாடுகளுக்கிடையில் பலர் சிக்கியிருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.
கடந்த இரண்டு மாதங்களில் இப்பகுதியில் 1200 முறை நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. அவற்றில் நேற்று முன்தினம் நிகழ்ந்தது தான் 5.8 புள்ளி அளவைத் தொட்டுள்ளது.
பசிபிக் பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள நிலநடுக்கம், சுனாமி இவற்றை ஆய்ந்து வரும் நிபுணர்கள் சீனாவின் இப்பகுதியில் மீண்டும் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பிருப்பதாக எச்சரித்துள்ளனர்.

No comments:

Post a Comment