Thursday, 28 April 2011

அரச திருமணத்தில் எங்களுக்கு முழு ஈடுபாடு இல்லை: பிரிட்டன் மக்கள்



பிரிட்டனில் பொருளாதார நெருக்கடி காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வேலைகளை இழந்துள்ளனர்.இந்நிலையில் நடக்கவிருக்கும் இளவரசர் வில்லியம் திருமணத்தில் பிரிட்டன் மக்கள் அதிகளவில் ஈடுபாடு காட்டவில்லை. பிரிட்டனில் அரச குடும்ப திருமணங்களைப் பொறுத்தவரை உலகப் போர், பொருளாதார நெருக்கடி என்பன போன்ற ஒருவித நெருக்கடி காலகட்டங்களிலேயே நடந்திருக்கின்றன.
இளவரசர் வில்லியமின் திருமணமும் இதற்கு விதிவிலக்கல்ல. பிரிட்டன் தற்போது பொருளாதார நெருக்கடியில் உள்ளது. இதனால் அங்கு ஆயிரக்கணக்கானோர் தங்கள் வேலையை இழந்து விட்டனர். பெட்ரோல் விலை அதிகரித்துள்ளது. பிரிட்டன் நாணயமான பவுண்ட்டின் நிலை பலவீனமாக இருப்பதாக பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.
பிரிட்டன் மக்களின் மனநிலையும் வேறு விதமாக உள்ளது. இவ்வளவு பொருளாதார நெருக்கடியில் இப்படி ஆடம்பரமாக திருமணம் நடத்த வேண்டுமா என்று அவர்கள் கோபத்தில் உள்ளனர். அதனால் அவர்கள் திருமண விருந்தில் கலந்து கொள்ள விரும்பவில்லை என்றும், அரச பரம்பரை நீடிப்பதை விரும்பவில்லை என்றும் கூறப்படுகிறது.
ஆனால் திருமணத்திற்கு ஆகும் செலவு அனைத்தையும் அரச குடும்பமும், மணமகள் கதே மிடில்டன் குடும்பமும் பகிர்ந்து கொள்ளும் என்று பக்கிங்ஹாம் அரண்மனை சமீபத்தில் குறிப்பிட்டிருந்தது. திருமணத்திற்கான பாதுகாப்பு ஏற்பாடு உள்ளிட்ட சிலவற்றுக்கு மட்டும் அரசு செலவழிக்கும் என்று தெளிவாக்கப்பட்டிருந்தது.
சமீபத்தில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் 35 சதவீதம் பேர் அவரவர் வீடுகளில் தொலைக்காட்சி மூலம் திருமணத்தைப் பார்க்கப் போவதாகவும், 35 சதவீதம் பேர் திருமணத்தைப் புறக்கணிக்கப் போவதாகவும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment