Saturday, 26 February 2011

அப்ரிடி அபார பந்துவீச்சு : இலங்கையை வீழத்தி 11 ரன்களால் பாகிஸ்தான் வெற்றி

கொழும்பில் இன்று  நடைபெற்ற உலகக் கோப்பை ஏ-பிரிவு ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி இலங்கையை 11 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
சயிட் அப்ரிடி அபாரமாக வீசி 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

பாகிஸ்தான் 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 277 ரன்கள் எடுக்க, இலங்கை 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 266 ரன்கள் எடுத்து 11 ரன்களில் தோல்வி தழுவியது.

இதன் மூலம் பாகிஸ்தான் 2 போட்டிகளில் வெற்றி பெற்று 4 புள்ளிகளைப் பெற்றது. உலகக் கோப்பையில் பாகிஸ்தானை இன்னும் இலங்கை வீழ்த்தவில்லை என்பதும் தொடர்கிறது.

ஸ்கோர் நெருக்கமாகக் காணப்பட்டாலும், சமர சில்வா, சங்கக்காரா நடுவில் பேட்டிங் செய்த ஓவர்களிலேயே இலங்கை தோற்று விட்டது என்றே கூற வேண்டும்.

சமர சில்வா களமிறங்கி 55 பந்துகளில் 20 ரன்களையே எடுத்தார். அரைசதம் எடுத்த பிறகுதான் இவர் தன் முதல் பவுண்டரியை அடித்தார்.

நடுவில் பவர் பிளே எடுக்கும் போது இலங்கைக்கு ஒரு ஓவருக்கு 8.5 ரன்களுக்கு மேல் தேவைப்பட்டது.

பவர் பிளேயை சங்கக்காரா 34-வது ஓவரில் எடுத்தார். ஆனால் அந்த 5 ஓவர்களில் 37 ரன்களையே எடுக்க முடிந்தது.

சங்கக்காரா 61 பந்துகளில் 2 பவுண்டரிகள் ஒரு சிக்சர் அடித்து அப்ரிடி பந்தில் ஆட்டமிழக்க இலங்கையின் வாய்ப்புகள் மங்கத் தொடங்கியது.

இவரும் சமர சில்வாவும் இணைந்து 104 ரன்களில் 73 ரன்களைச் சேர்த்த அந்த மந்தப் போக்கிலேயே இலங்கை தோல்வி தழுவியது என்று கூறவேண்டும்.

கம்ரன் அக்மல் 2 சுலப ஸ்டம்பிங் வாய்ப்புகளை கோட்டை விட்டார். அப்துர் ரெஹ்மான் எளிதான கேட்சைக் கோட்டைவிட்டார். பாகிஸ்தானின் களத்தடுப்பு  மோசமாகவும் இருந்தது. சில அபூர்வ வேளைகளில் நன்றாகவும் இருந்தது.

கடைசியில் சமர சில்வா அடிக்கத் தொடங்கினா 78 பந்துகளில் அவர் 5 பவுண்டரிகளை அடித்து 57 ரன்கள் எடுத்து 8-வது விக்கெட்டாக ஆட்டமிழந்தார்.

இடையில் அஞ்சேலோ மேத்யூஸ் விக்கெட்டை சயிட் அப்ரிடி வீழ்த்தினார். மேத்யூஸ் நின்றிருந்தால் பாகிஸ்தான் தோல்வி கூட தழுவியிருக்கலாம். பெரேரா என்ற அதிரடி இடது கை வீரர் 8 ரன்கள் எடுத்து அச்சுறுத்தலாகத் திகழ்ந்தபோது ஷோயப் அக்தர் அவரை பவுல்டு செய்தார்.

கடைசியில் 3 ஓவர்களில் 36 ரன்கள் தேவைப்பட்டது. குலசேகரா 14 பந்துகளில் 2 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 24 ரன்கள் எடுக்க ஆட்டம் உயிருடன் இருந்தது.

ஆனால் கடைசி ஓவரில் உமர் குல் பந்தில் ஆட்டமிழந்தவுடன் எல்லாம் முடிந்து போனது.

சமர சில்வா மந்தமாக ஆடியதும், சங்கக்காராவுக்கு அடிக்க முடியாமல் போனதும், அப்டிரி, அப்துர் ரெஹ்மான், அக்தர் ஆகியோர் சிறப்பாக வீசியதும் இலங்கையின் தோல்விக்குக் காரணாக அமைந்தது.

சயிட் அப்ரிடி ஆட்ட நாயகன் விருதைத் தட்டிச் சென்றார். இரண்டு போட்டிகளில் அவர் 9 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.

No comments:

Post a Comment