Wednesday, 16 February 2011

சுவிஸில் வாழும் பெண் தான் பயின்ற வட்டக்கச்சி பாடசாலை மாணவர்களுக்கு 25 துவிச்சக்கர வண்டிகள் உதவி


சுவிற்சர்லாந்தில் வாழும் சிவநிதி பன்னீர்செல்வம் அவர்கள் தாயகத்தில் தான் கல்வி பயின்ற வட்டக்கச்சி மகாவித்தியாலயத்தில் கல்வி பயிலும் போரினால் பாதிக்கப்பட்ட 25 மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகளை பெற்றுக்கொடுத்துள்ளார் .
அண்மையில் தாயகம் சென்ற சிவநிதியவர்கள் தான் பணிபுரியும் மாற்று வலுவுடையோர் காப்பகத்தில் ( Stiftung Wagerenhof ) சக பணியாளர்களினது (தமிழர் அல்லாதவர்கள்) பங்களிப்புடன் இந்த நற்பணியை மேற்கொண்டிருந்தார்.
இவரது செயற்பாடுகளுக்கு தாயகத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் அவர்களும், சுவிஸ் வட்டக்கச்சி இராமநாதபுரம் ஒன்றியத்தின் தாயக இணைப்பாளர்களும் நடைமுறை ஒத்துழைப்பினை வழங்கியிருந்தனர்.
அண்மையில் கல்லூரியில் நடைபெற்ற காலை ஆராதனை நிகழ்வில் முன்னுரிமை அடிப்படையில் கல்விச் சமூகத்தால் தெரிவுசெய்யப்பட்ட 25 மாணவர்களிடமும் துவிச்சக்கரவண்டிகள் கையளிக்கப்பட்டன.
இந் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த நாடாளமன்ற உறுப்பினர் சிறிதரன் அவர்கள்,
இலங்கையில் இலவசக்கல்வி முறைமை பின்பற்றப்பட்டாலும் கற்றல் நடவடிகயினை மேற்கொள்வதில் தமிழ் மாணவர்கள் பல சிரமங்களை எதிர்நோக்குகின்றனர். குறிப்பாக போர் காலத்திலும் போருக்குப் பின்னான காலத்திலும் வன்னிப் பெருநில மாணவர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் உறவுகளையும் உடமைகளையும் இழந்து நிர்க்கதியான நிலையிலேயே மீள்குடியேற்றப்பட்டுள்ளனர். இவர்களிடம் உள்ள நம்பிக்கைச் சொத்து இவர்களது கல்வி மட்டுமே,
எனவே இவர்களது கற்றல் செயற்பாட்டுக்கு ஊக்கம் கொடுப்பதன் மூலம் இவர்களையும் இச்சமூகத்தில் பங்காளிகளாக்கி எம்மினத்தை வாழவைக்கமுடியும்.
சிவநிதியவர்களின் இம்முயற்சியினை முன்மாதிரியாகக்கொண்டு புலத்து உறவுகளின் மனித நேயப் பணிகளை வன்னிப் பெருநில கல்விச் சமூகத்துடன் இணைந்த எதிர் பார்க்கின்றோம் என்றார்.
நிகழ்வில் கல்லூரி முதல்வர் M .C . L .மனுவல் அவர்களிடம் கல்லூரியின் தேவைகளுக்காக சிறுதொகை நிதியினையும் சிவநிதியவர்கள் வழங்கியிருந்தார்.
தமது பாடசாலைதனை மறவாது பங்களிப்புகளை செய்துவரும் புலம் பெயர் பழைய மாணவர்களை கல்லூரியின் கல்விச் சமூகம் பாராட்டியதை காணமுடிந்தது .

2 comments: