பயிற்சி ஆட்டத்தின் போது ஏற்பட்ட குழப்பங்கள், உலகக் கோப்பை கிரிக்கெட் ஆட்டங்களின் போது ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென இலங்கை...
..பிரேமதாசா மைதான நிர்வாகிகளுக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) உத்தரவிட்டுள்ளது.
இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள இந்த மைதானத்தில் இலங்கை - மேற்கிந்தியத்தீவுகள் இடையிலான பயிற்சி ஆட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அப்போது ரசிகர்கள் உள்ளே வரும் நடைமுறையில் அதிக கெடுபிடிகள் இருந்ததால் சிக்கல் ஏற்பட்டது.
மைதானத்துக்கு சுமார் அரை கி.மீ. தூரத்துக்கு முன்னால் உள்ள இடத்தில் டிக்கெட்டுகள் வழங்கப்பட்டன.
இதுதவிர கிரிக்கெட் நிர்வாக அதிகாரிகள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்டோர் உள்ளே வருவதிலும் பாதுகாப்பு கெடுபிடிகள் அதிகம் இருந்தது.
ஐசிசி பத்திரிகை தொடர்பு அதிகாரி ஒருவருக்கு மைதானத்துக்கு வர முதலில் அனுமதி மறுப்பட்டது. இதுபோன்ற பல தேவையற்ற குழப்பங்கள் போட்டியின் போது ஏற்பட்டன.
போட்டி ஏற்பாடுகளிலும் பல குழப்பங்கள் இருந்ததாக உள்ளூர் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டிருந்தன.
இந்நிலையில் உலகக் கோப்பை போட்டிகள் நடைபெறும் போது இதுபோன்ற தேவையற்ற குழப்பங்கள் ஏற்படுவதைத் தவிர்க்கும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென மைதான நிர்வாகிகளுக்கு ஐசிசி புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது.
இந்த விஷயத்தில் இலங்கை கிரிக்கெட் ஏற்பாட்டாளர்கள் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். இனி வரும் ஆட்டங்களில் இதுபோன்ற பிரச்னைகள் ஏற்படாது என்பது உறுதி செய்யப்பட வேண்டுமென்றும் ஐசிசி கூறியுள்ளது.
இந்த உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்காக புதுப்பொலிவு பெற்றுள்ள கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் ஒரு காலிறுதி, ஓர் அரையிறுதி ஆட்டம் உள்பட மொத்தம் 7 ஆட்டங்கள் நடைபெறவுள்ளன.

No comments:
Post a Comment