| கன்னியாகுமரியில் விடப்பட்ட புறாக்கள் 13 மணி நேரம் பறந்து காஞ்சிபுரம் வந்து சேர்ந்தன. காஞ்சிபுரத்தில், வீடுகளில் புறாக்கள் வளர்ப்போர் இணைந்து, காஞ்சிபுரம் ஹோமர் பீஜியன் அசோசியேஷன் என்ற அமைப்பை உருவாக்கியுள்ளனர். இதன் தலைவராக விநாயகம், செயலராக லோகநாதன் ஆகியோர் உள்ளனர். ஏழு பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்கள் தங்கள் வீடுகளில், வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஹோமர் வகை புறாக்களை வளர்த்து வருகின்றனர். இப்புறாக்களுக்கிடையே, அவ்வப்போது வனத்துறை அனுமதி யுடன் நீண்ட தொலைவு பறக்கும் போட்டி நடத்தப்படுகிறது. வழக்கம்போல், கடந்த 12ம் திகதி போட்டி துவங்கியது. போட்டியில் 27 புறாக்கள் பங்கேற்றன. அவை போட்டிக்கு முந்தைய நாள், கார் மூலம் கன்னியாகுமரிக்கு கொண்டு செல்லப்பட்டன. 12ம் திகதி காலை 7.30 மணிக்கு புறாக்கள் திறந்து விடப்பட்டன. கன்னியாகுமரியிலிருந்து காஞ்சிபுரத்திற்கான வான்வீதி தூரம் 574 கிலோ மீட்டர். கன்னியாகுமரியில் விடப்பட்ட, வாலாஜாவை சேர்ந்த மகாலிங்கம் என்பவரின் புறா, மறுநாள் காலை 8.03 மணிக்கு அவரது வீட்டை வந்தடைந்தது. காஞ்சிபுரத்தை சேர்ந்த விநாயகத்திற்கு சொந்தமான புறாக்கள் காலை 9.24 மணிக்கும், 9.32 மணிக்கும் காஞ்சிபுரத்தை வந்தடைந்தன. வில்வராஜ் புறா 9.45 மணிக்கும், லோகநாதன் புறா 9.53 மணிக்கும் வீட்டை வந்தடைந்தன. புறாக்கள் வந்தடைந்த நேரத்தின் அடிப்படையில் முதல் 5 இடங்களைப் பிடித்த புறாக்களின் உரிமையாளர்களுக்கு பரிசு வழங்கப்பட உள்ளது. இது குறித்து வில்வராஜ் கூறியதாவது: சென்னையில் ஹோமர் பீஜியன் அசோசியேஷன் உள்ளது. அவர்களின் ஒப்புதலோடு, காஞ்சிபுரத்தில் 2009ம் ஆண்டு காஞ்சிபுரம் ஹோமர் பீஜியன் அசோசியேஷன் அமைப்பை துவக்கினோம். புறாக்களை முதலில் 10 கிலோ மீட்டர் தூரத்திலிருந்து விடுவோம். அவை சரியாக வீட்டிற்கு வந்தடைந்ததும், அடுத்தடுத்து தொலைவை நீட்டித்து பழக்கப்படுத்துவோம். இரவு நேரங்களில் புறாக்கள் பறக்காது. இம்முறை கன்னியாகுமரியில் பறக்க விடப்பட்ட புறாக்கள் 13 மணி நேரம் பறந்து காஞ்சிபுரம் வந்து சேர்ந்துள்ளன. பொழுதுபோக்காக புறாக்களை வளர்க்கிறோம். போட்டியில் பங்கேற்பது உற்சாகமாக உள்ளது. புறாக்களுக்கு உணவாக பச்சைப்பயிறு, மூக்குகடலை, கோதுமை, கம்பு போன்றவற்றை வழங்குகிறோம். சிலர், புறாக்களை வீட்டில் வளர்த்தால் தரித்திரம் என்பர். எனக்கு நம்பிக்கை இல்லை. என் தந்தை காலத்திலிருந்தே வீட்டில் புறா வளர்க்கிறோம். இவ்வாறு வில்வராஜ் தெரிவித்தார். |
Thursday, 24 March 2011
குமரியிலிருந்து காஞ்சிபுரத்திற்கு பறந்த புறாக்கள் 13 மணி நேரத்தில் 574 கிலோ மீட்டர் கடந்து சாதனை
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment