Sunday, 1 May 2011

பசுத்தோல் போர்த்திய திருடன்



"பசுத்தோல் போர்த்திய புலி" என்ற பழமொழியைக் கேட்டிருப்போம். ஆனால் பசுத்தோல் போர்த்திய திருடனைப் பற்றி கேள்விப்பட்டதுண்டா? அப்படி ஒரு விசித்திரமான திருட்டுச் சம்பவம் அமெரிக்காவில் நடந்துள்ளது.
அமெரிக்காவின் விர்ஜினியா மாகாணத்தின் ஸ்டாபோர்ட் பகுதியில் மொத்த விற்பனைக் கடையான "வால்மார்ட்" என்ற கடை உள்ளது. இதில் கடந்த வாரம் இரவு நேரத்தில் ஒரு பசு உள்ளே நுழைந்து 26 கேலன்(1 கேலன்- 3.78 லிட்டர்) பால் கேன்களைத் திருடிச் சென்றது. கண்ணிமைக்கும் நேரத்தில் இச்சம்பவம் நடந்து முடிந்து விட்டது.
பசு வாசலைத் தாண்டிச் செல்லும் போது, இரண்டு கால்களுடன் நிமிர்ந்து நொடிப் பொழுதில் தப்பித்ததைப் பார்த்த போது தான் அங்குள்ளவர்களுக்கு வந்தது பசு அல்ல. பசுத்தோல் போர்த்திய திருடன் என்று தெரிந்தது.
உடனடியாக அதிகாரிகள் அப்பகுதிக்கு வந்து சோதனையிட்டனர். அருகில் உள்ள "மெக்டொனால்ட்" கடைக்குச் சென்று நோட்டமிட்டனர். ஒரு மேசை அருகில் 18 வயது இளைஞன் ஒருவன் பெரிய மனிதர் போல் ஆடையணிந்து உட்கார்ந்திருந்தான். அவன் தான் திருடன் என்று கண்டுபிடித்தனர் அதிகாரிகள்.
அவனைக் கைது செய்து விசாரித்ததில் அவர்கள் நினைத்தது உண்மை என்று தெரியவந்தது. அவனது காரில் அவன் போர்த்தியிருந்த பசுத்தோல் இருந்தது. திருடிய பின் அந்த பால் கேன்களை வழியில் போவோர் வருவோருக்கு எல்லாம் கொடுத்து விட்டு நல்ல பிள்ளை போல் அருகில் இருந்த கடைக்குச் சென்று அமர்ந்து கொண்டான் அந்த இளைஞன்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில்,"கடையை விட்டு வெளியேறிய போது அவனது முகம் தெரிந்து விட்டது. அதை அடையாளம் வைத்து தான் கண்டுபிடித்தோம். இதுவரை நடந்திராத ஒரு புதுவகை திருட்டாக இது நிகழ்ந்துள்ளது" என்றனர்.

No comments:

Post a Comment