Saturday 10 December 2011

வவுனியா,கூழாங்குளத்தில் வரலாற்று சிற்பங்கள் கண்டெடுப்பு


வவுனியா மாவட்டம் சாஸ்திரி கூழாங்குளத்தில் கண்டெடுக்கப்பட்ட பண்டைய வன்னித்தமிழரின் வாழ்வியலை எடுத்தியம்பும் களிமண் சிற்பங்கள் யாழ்.பல்கலைக்கழக வரலாற்று துறைக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. 
கடந்த செவ்வாயன்று மேற்படி சாஸ்திரி கூழாங்குளத்தில் பொதுநோக்கு மண்டபம் ஒன்றிற்கு மண் இடுவதற்காக அருகிலுள்ள குளத்திலிருந்து மண் எடுக்கப்பட்டு கொண்டுவரப்பட்டுள்ளது. அவற்றை பரவும் போது அவற்றிலிருந்து சில மண் சிற்பங்களை மக்கள் கண்டெடுத்துள்ளனர்.
இதனடிப்படையில் இந்த விடயம் கிராமசேவகருக்கு தெரியப்படுத்தப்பட்டு அவர் மூலம் மாவட்ட அரசாங்க அதிபருக்கு தெரியப்படுத்தப்பட்டது. பின்னர் குறித்த பகுதியில் மண் அகழ்வதற்கும், அகழ்ந்த மண்ணை பரவுவதற்கும் மாவட்டச் செயலகம் தடை விதித்திருந்தது.
இந்நிலையில் நேற்றய தினம் யாழ்.பல்கலைக்கழக வரலாற்றுத்துறை பேராசிரியர் தலைமையிலான குழு வவுனியா சென்று குறித்த பகுதியை பார்வையிட்டுதுடன் பொருமளுவு சிற்பங்களை யாழ்ப்பாணத்திற்கு கொண்டுவந்துள்ளனர்.
இந்நிலையில் இது குறித்து பேராசிரியர் புஸ்பரட்ணம் கருத்துப் பகர்கையில் இற்றைக்கு இரண்டாயிரத்து 200 வருடங்களுக்கு முற்பட்ட சிற்பங்களே அங்கு கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாகவும்,
தென்னிந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டதைப்போன்று அந்த சிற்ப அமைவுகளைப்போன்றே இங்கு கண்டெடுக்கப்பட்ட சிற்பங்களும் உள்ளன.
எனவே குளங்களை அதாவது நீராதாரங்களை அடிப்படையாக கொண்டு பாரம்பரியமான வன்னித் தமிழர்கள் வாழ்ந்தமைக்கான எச்சங்களே இவைகள் என்றார்.
மேலும் இது தொடர்பில் தொல்லியல் திணைக்களத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அந்தப்பகுதியில் தொடர்ந்தும் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது

No comments:

Post a Comment