Wednesday 7 December 2011

பிரிட்டன் கலவரம் குறித்த பல உண்மை தகவல்கள் வெளியீடு

பிரிட்டனில் கடந்த ஆகஸ்ட் மாதம் நடந்த கலவரத்திற்கு இளைஞர்கள் மத்தியில் காவல்துறையினரின் மேல் ஏற்பட்ட மோசமான மனநிலையே காரணம் என புதிய ஆய்வறிக்கை மூலம் தெரியவந்துள்ளது.
பிரிட்டன் தலைநகர் லண்டனில் டோட்டன்ஹேம் பகுதியில் கடந்த ஆகஸ்ட் மாதம் 6ம் திகதி தொடங்கிய கலவரம் நாடு முழுவதும் பரவியது. 10ம் திகதி வரை நடந்த இக்கலவரத்தில் இளைஞர்களே பெரும்பான்மையும் ஈடுபட்டனர்.
இக்கலவரத்திற்கான காரணத்தைக் கண்டறிவதற்காக கார்டியன்(Guardian) பத்திரிகை மற்றும் லண்டன் பொருளாதாரப் பள்ளி இணைந்து ஓர் ஆய்வை நடத்தின. இந்த ஆய்வில் கலவரத்தில் பங்கேற்ற 270 பேரிடம் கேள்விகள் கேட்கப்பட்டன.
அதில் அன்றாட வாழ்வில் காவல்துறை மக்களிடம் நடந்து கொள்ளும் முறையால பலர் எரிச்சல் அடைந்ததாகத் தெரிவித்தனர். கண்ட கண்ட இடங்களில் வைத்த காவல்துறையினர் சந்தேகப்படும் நபர்களை சோதனையிட்டதைக் குறிப்பிட்டனர்.
இதனால் காவல்துறையினர் மீது தங்களுக்கு அவநம்பிக்கையும், கோபமும் வந்ததாகக் கூறினர். மேலும் மார்க் டக்கன் என்ற இளைஞர் மீது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூடு தங்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியதாக கூறினர்.
பல கடைகளில் கொள்ளை அடித்தது ஏன் என்ற கேள்விக்கு, இதை விட்டால் வேறு வாய்ப்பு கிடைக்காது என்பதால் கொள்ளை அடித்ததாகத் தெரிவித்துள்ளனர்.
மேலும் விலை உயர்ந்த பொருட்களை தங்களால் வாங்க முடியாது என்பதால் கொள்ளையில் ஈடுபட்டதாகவும் கூறினர்.
ஆய்வின் இறுதியில் இக்கலவரத்தின் பின்னணியில் தாதா கும்பல்களின் வேலை மிகச் சிறிதளவு என்பது கண்டறியப்பட்டது. மேலும் ட்விட்டர்(Twitter), பேஸ்புக்(Facebook) சமூக வலைத்தளங்களை கலவரக்காரர்கள் பயன்படுத்தி கலவரத்தைப் பரப்பினர் என்ற தகவலும் சரியல்ல என்பது தெரியவந்தது.
மொத்தத்தில் பல அதிருப்திகளை கலவரக்காரர்கள் வெளிப்படுத்தினாலும் அவர்களின் அதிருப்தியின் மையமாக தாங்கள் புறக்கணிக்கப்படுகிறோம் என்ற உணர்வு தான் இருந்தது என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

No comments:

Post a Comment